புத்தாண்டை வரவேற்க குடியிருப்புப் பேட்டைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு நிறைவடையவிருக்கும் வேளையில் தீவு முழுவதும், அடித்தள அமைப்புகள் ஏற்பாடு செய்யும் 28 சமூகக் கொண்டாட்டங்களில் கிட்டத்தட்ட 70,000 குடியிருப்பாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக மக்கள் கழகம் டிசம்பர் 22ஆம் தேதியன்று கூறியது.
எடுத்துக்காட்டாக, புத்தாண்டுக்கு முந்திய நாளன்று ஹார்ட்பீட்@பிடோக்கில் ஈஸ்ட் கோஸ்ட், கம்போங் சாய் சீ வட்டாரங்களைச் சேர்ந்த 1,500 குடியிருப்பாளர்கள் வரை அமைதியான இசை நடனம் ஒன்றில் கலந்துகொள்வர்.
ஆகப் பெரிய அமைதியான இசை நடனத்துக்கு, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ஒரு முயற்சி அது.
புத்தாண்டின் முந்திய நாளன்று பிற்பகல் 2 மணிக்கு பொங்கோல் குடியிருப்பாளர்களுக்குக் கொண்டாட்டங்கள் தொடங்கும்.
ஃபேரர்-லீடனில், செல்லப் பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் டிசம்பர் 30ஆம் தேதியன்று கொண்டாட்ட நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
புத்தாண்டுக்கு முந்திய நாளன்று வாணவேடிக்கைகளைக் காண விரும்புவோருக்கு ஏழு இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கழகம் கூறியது.
“அவர் தெம்பனிஸ் ஹப்”, புளோக் 215, பூன் லே கூடம், ஊட்லண்ட்ஸ் விளையாட்டரங்கு, “ஃபூட்சால் அரினா@யீசூன்”, கியாட் ஹொங் சதுக்கம், மெக்பர்சன் சமூக நிலையத்திற்கு வெளியே உள்ள கூடம், புளோக் 46, மரின் கிரஸ்சன்ட் கூடம் ஆகியவையே அவை.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள் அருகிலுள்ள சமூக நிலையங்கள், குடியிருப்பாளர் குழுக்கள், அக்கம்பக்கக் குழுக்கள், குடியிருப்பாளர் கட்டமைப்புகள் ஆகியவற்றை அணுகி, நிகழ்ச்சிகள் குறித்த மேல்விவரங்களைப் பெறலாம்.

