சிங்கப்பூர் ஜனநாயக கட்சி வேட்பாளர் பால் தம்பையா முந்தைய நாள் தமது பிரசாரத்தில் கூறிய கருத்துகளுக்குப் புதன்கிழமை (ஏப்ரல் 30) புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் பிரசாரத்தில் பதிலளித்த திரு லியாங் எங் ஹுவா, பொதுச் சேவைத் துறை திறன்மிக்கதாக இருந்தாலும், அதைச் சரியான வழியில் இட்டுச்செல்லவும் அதனிடமிருந்து சிறந்த சேவைகளைப் பெறவும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசியம் என்றார்.
“பொதுச் சேவை ஊழியர்கள் மிகுந்த திறன் வாய்ந்தவர்கள் என்பதால், நாம் முன்வைக்கும் அனைத்துத் திட்டங்களுக்கும் அவர்கள் ஒப்புதல் அளித்துவிடுவது இல்லை. பரிந்துரைக்கப்படும் திட்டங்களை ஆழமாக ஆராய்ந்து, அவற்றைச் சரியான முறையில் முன்வைத்தால் மட்டுமே அவற்றை ஏற்கின்றனர்.
“இச்சூழலில் நல்ல திட்டங்களை அமல்படுத்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு இன்றியமையாததாகும்,” என்று அவர் கூறினார்.
ஆகையால், எந்த நாடாளுமன்ற உறுப்பினர் திட்டங்களை முன்வைத்தாலும் அதைப் பொதுச் சேவைத் துறை அமல்படுத்தும் என்று எண்ணுவது அறியாமை என்றும் அவர் தெரிவித்தார்.
“நான் வளங்கள் நிறைந்தவர் என்று பேராசிரியர் தம்பையா கூறினார். ஆனால், வளங்களை புக்கிட் பஞ்சாங்கிற்கு சரிவர எடுத்துவர தொடர்ந்து 20 ஆண்டுகள் உழைத்து வருகிறேன். இனியும் உழைப்பேன்,” என்று உறுதியளித்தார் திரு லியாங்.
எதிர்க்கட்சியினரின் கருத்துகள் குறித்து பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி வேட்பாளர்களில் ஒருவரான திரு எட்வர்ட் சியா, “பேசுவது எளிது. ஆனால் அவர்கள் கூறும் வார்த்தைகள் வீடுகளைக் கட்டிவிடாது, வேலைகளை உருவாக்கிவிடாது, வாழ்க்கைச் செலவினங்களைக் குறைத்துவிடாது. இறுதியில், இந்த வெற்று வாக்குறுதிகளுடன் நாம்தான் வாழ வேண்டும்,” என்றார்.

