திருமணம், பிள்ளைப்பேற்றுக்கு ஆதரவாக வெள்ளை அறிக்கை: இந்திராணி ராஜா

திருமணம், பிள்ளைப்பேற்றுக்கு ஆதரவாக வெள்ளை அறிக்கை: இந்திராணி ராஜா

2 mins read
74b7b7ca-e2d8-45b7-b9fa-d35f7e68b338
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மக்கள்தொகை விவகாரங்கள் தொடர்பான மாநாட்டில் குமாரி இந்திராணி ராஜா உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் கொள்கை ஆய்வாளர்கள், பிள்ளைகளை வளர்க்கும் தம்பதிகளுக்கு நிதி ரீதியாக எவ்வாறு உதவிசெய்யலாம் என்பதை ஆராயவிருப்பதாகப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் குறைவான பிறப்பு விகிதத்தை முன்னிட்டு பிள்ளை வளர்ப்பில் ஏற்படக்கூடிய உளைச்சலைச் சமாளிக்கத் தம்பதிகளுக்கு எவ்வாறு கைகொடுக்கலாம் என்பதும் ஆராயப்படும் என்றார் அவர்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (மே 21) நடைபெற்ற மக்கள்தொகை விவகாரங்கள் தொடர்பான மாநாட்டில் குமாரி இந்திராணி உரையாற்றினார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் யொங் லூ லின் மருத்துவப் பள்ளியும் சிங்கப்பூர் மக்கள்தொகைச் சங்கமும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தன.

மாநாட்டைத் தொடர்ந்து கருவுறுதல், மனிதவள மேம்பாடு ஆகியவை தொடர்பில் மருத்துவப் பள்ளியும் சங்கமும் இணைந்து வெள்ளை அறிக்கை ஒன்றை உருவாக்கவிருக்கின்றன.

ஆய்வு, கலந்துரையாடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கை சார்ந்த பரிந்துரைகள் அறிக்கையில் இடம்பெறும்.

அத்தகைய அறிக்கையை மருத்துவப் பள்ளியும் சங்கமும் இணைந்து உருவாக்குவது இதுவே முதல்முறை.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவு கடந்த ஆண்டு கணிசமாகக் குறைந்தது. கடந்த ஆண்டு பதிவான பிறப்பு விகிதம் 0.87. அந்த விகிதம் 2024ஆம் ஆண்டில் 0.97ஆக இருந்தது.

அர்த்தமுள்ள வாழ்க்கை குறித்த மக்களின் கண்ணோட்டம் மாறிவருவதால் திருமணம் செய்துகொள்வதற்கும் பெற்றோராவதற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகக் குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றால் பிள்ளைகளை வளர்க்க சிங்கப்பூரின் சூழல் உகந்ததாக இல்லை என்ற எண்ணமும் தலைதூக்கியிருப்பதை அவர் சுட்டினார்.

புதிதாக அமைக்கப்பட்ட திருமணம், பிள்ளைப்பேறு பணிக்குழுவுக்குத் தலைமை தாங்கும் குமாரி இந்திராணி, “பிள்ளைகளை வளர்க்கப் போதுமான நிதி இருக்கிறதா என்பது மட்டுமின்றி பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையைக் கொடுக்க முடியும்?, பெற்றோராக எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியும்? என்ற கேள்விகளையும் பெற்றோர் கேட்கின்றனர்,” என்றார்.

“சிங்கப்பூர் ஒரு நாடாக முன்னேற கடின உழைப்பு உதவியிருக்கிறது. ஆனால், இலக்கை அடைவதற்கான அந்த உழைப்பால் தனிநபர் நலனையும் திருமணம், பிள்ளைப்பேறு போன்ற இலக்குகளையும் விட்டுக்கொடுக்கிறோம். செழிப்பாக இருக்க அந்த இரண்டும் தேவை. இரண்டில் எது முக்கியம் என்று யோசிப்பதற்குப் பதிலாக இரண்டையும் ஒருசேர எவ்வாறு கையாளலாம் என்பதை ஆராயவேண்டும்,” என்று குமாரி இந்திராணி அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்