சிங்கப்பூரின் அரசியல் ரீதியான முதிர்ச்சி தொடர்பில் அமைச்சர் ஜனில்

சிங்கப்பூரின் அரசியல் ரீதியான முதிர்ச்சி தொடர்பில் அமைச்சர் ஜனில்

2 mins read
5bbd23e8-a2f5-4cc4-9a8d-42770c1ddc50
சிங்கப்பூர் கண்ணோட்டங்கள் 2024 மாநாட்டில் ஐபிஎஸ் மூத்த ஆய்வாளர் கல்பனா விக்னேஷா (வலம்) வழிநடத்திய கலந்துரையாடலில் டாக்டர் ஜனில் புதுச்சேரி பேசினார். - படம்: கொள்கை ஆய்வுக் கழகம்

அரசியல் விவகாரங்களில் சிங்கப்பூர் இளையர்கள் ஆர்வம் காட்டுவதுடன் தங்களை அவற்றில் ஈடுபடுத்திக்கொள்வதும் உண்டு.

அதனால், அரசியல் ரீதியாக போதுமான முதிர்ச்சி தன்னிடம் இல்லை என்று சிங்கப்பூர் கூறிக்கொண்டால் தன்னையே அது குறைத்து மதிப்பிடுவதாகிவிடும் என்று சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

இளையர்கள் கேள்வி கேட்கிறார்கள், அடித்தள அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள், தனக்கும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள் என்று அவர் சுட்டினார்.

‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் தொடர்பான அமர்வுகளும் இளையர்களை ஈடுபடுத்தும் தளமாக விளங்குகின்றன.

சிங்கப்பூர் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த, தன்னிலை உணர்ந்த சமூகமாக எப்படி வளரலாம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அரசியல் ரீதியான முதிர்ச்சி நம்மிடம் இல்லை என்று யார் சொன்னது?” என்று டாக்டர் ஜனில் பதில் கேள்வி கேட்டார்.

கொள்கை ஆய்வுக் கழகம் (ஐபிஎஸ்) ஏற்பாடு செய்திருந்த ‘சிங்கப்பூர் கண்ணோட்டங்கள்’ மாநாட்டின்போது இளையர் பலரை உள்ளடக்கிய 1,200 பேர் முன்னிலையில் அவர் பேசினார்.

அரசியலில் ஈடுபட இளையர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவது குறித்துப் பேசிய அவர், “இளையர்களுக்குக் கவலை அளிக்கக்கூடிய விவகாரங்கள் யாவை என்பதை நாங்கள் புரிந்துகொள்வது அவசியம். எதிர்காலத்தில் சிங்கப்பூரைக் கட்டி எழுப்புவதில் ஈடுபடும்போது அவர்கள் என்ன செய்வார்கள்,” என்றார்.

இவ்வாண்டு மாநாட்டின் கருப்பொருள், ‘இளையர்’. சமூக-பொருளாதாரம், தொழில்நுட்பம், மக்கள்தொகை, தனிக் குடும்பம் எனப் பலதரப்பட்ட அம்சங்கள் தொடர்பில் இதற்குமுன் கண்டிராத சூழல்கள் மத்தியில் இன்றைய இளம் தலைமுறையினர் உள்ளனர்.

இலக்கை அடைந்துவிட்டதாகத் தன்னைப் பற்றி சிங்கப்பூர் நினைத்துவிடக்கூடாது என்றாலும் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடைந்த ஒரு சமுதாயமாகத் தான் இல்லை என்ற அடிப்படைச் சிந்தனை வந்துவிடக்கூடாது என்றார் டாக்டர் ஜனில்.

மாநாட்டுக்கு முன்னதாக ஐபிஎஸ் நடத்திய ஆய்வின்படி, வயதில் மூத்தவர்களைக் காட்டிலும் இளையர்கள் கூடுதல் குடிமை ஈடுபாடு கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்