பெற்றோரா? பள்ளியா? சமூகமா?
இக்கேள்விக்கு விடையளிக்குமுன், தற்போது இவை எம்மாதிரியான பொறுப்பைச் சுமக்கின்றன என்று எண்ணிப்பார்த்தல் அவசியம்.
வீடு என்பது மொழியின் கருவறை என்றால் அது மிகையாகாது. வீட்டில் தமிழ் ஒலிக்காவிட்டால், வகுப்பறையில் கற்ற தமிழ் ஏட்டோடு நின்றுவிடும்.
26 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட சிங்கப்பூர்ப் பெற்றோரில் 61 விழுக்காட்டினர் தங்கள் குழந்தைகளுடன் பேசும்போது, பெரும்பாலும் தாய்மொழியைக் காட்டிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினர் என்று 2020ஆம் ஆண்டில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவித்தது.
மாறிவரும் உலகச் சூழலில், நம் சிங்கப்பூர்ச் சமூகத்தில், பிற மொழி பேசுபவரோடு ஆங்கிலம் நம்மை இணைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், பணியிடம் உட்பட வெளியுலகிலும் ஆங்கிலத்திலேயே பேசுவதால் தமிழ்க் குடும்பங்களின் இல்லங்களிலும் ஆங்கிலம் முழுநேரமாக நடமாடத் தொடங்கிவிட்டது.
இதுவே நம்முன் உள்ள ஒரு சவால். இதனை மாற்ற, இல்லங்களில் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்கப் பெற்றோரின் பங்களிப்பு தேவைப்படுகிறது.
இதற்கு வலுச்சேர்க்க, பெற்றோர் தமிழை வெறும் பாடமாக மட்டும் கருதாமல், தேவைப்பட்டால் தாலாட்டாக, கதையாக, ஒரு செல்லமான அதட்டலாகக்கூட மாற்றலாம்.
தாய்மொழியில் பேசுவதை ஒரு சுமையாகக் கருதாது, சுகமாகக் கருதுதல் அவசியம் என்றே கூறவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், இக்கால மாணவர்கள் வீட்டில் செலவிடும் நேரத்தைவிட பள்ளிகளிலேயே அதிகம் இருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.
பள்ளிகளைப் பிரதிநிதித்துப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் சிறப்பான தமிழ் ஆற்றல் உடையவர்கள்.
அவர்களுக்கு வாய்ப்பு கிட்டுவதால், படைப்பாற்றலை வெளிப்படுத்தத் தளம் கிடைப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. அவர்களிடையே தமிழ் ஆர்வம் துளிர்விடுகிறது.
ஆயினும் மற்ற மாணவர்களையும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
தமிழ் ஆர்வத்தைத் தமிழ் ஆற்றலுக்கு இணையாகப் பார்ப்பதை விடுத்து, அனைத்து மாணவர்களின் ஆற்றலையும் வளர்க்கும் ஒருங்கிணைந்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
போட்டிகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தைத் தமிழ் ஆர்வத்தைச் செழுமையாக்கும் பயிலரங்குகளுக்கும் வழங்கவேண்டும்.
ஆற்றல்மிகு மாணவர்களுக்கு நல்கும் வாய்ப்புகள்போல மற்ற மாணவர்களையும் ஈடுபடுத்தும் வகையில் மற்ற நிகழ்ச்சிகளையும் வடிவமைத்தல் நன்மை பயக்கும்.
இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.
பள்ளிகளின் பங்கு அதிகபட்சம் 12 ஆண்டுகளுக்கே நீடிக்கும். ஆனால், அதற்குப் பின்பும் தாய்மொழியுடன் இருக்கும் தொடர்பு இன்றியமையாதது என்பதை உணரவேண்டும். பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைப்போல் அது துண்டிக்கப்பட்டுவிடலாகாது.
இத்தருணத்தில், சமூகத்தின் பொறுப்பு பேரளவில் நிலைக்க வேண்டும்
தமிழ்மொழி விழா, பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள் என்று நமது தமிழ்ச் சமூகம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவருவது நெகிழச் செய்கிறது.
குழுவாகச் செயல்படும் ஓட்டப்பந்தயத்தில், குழுவில் அனைவரும் பாடுபட்டு உழைத்தாலொழிய, அப்போட்டியில் வெற்றி பெற இயலாது.
அதைப் போலவே, தமிழ் மொழி வாழும் மொழியாக மலர, காலம்கடந்தும் நிலைத்திருக்க வேண்டுமெனில், எவரும் பொறுப்பிலிருந்து விலகாது, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு கேள்வியைத் தொடுத்திருந்தேன்.
அக்கேள்விக்கு என்னுடைய பதில் மூன்று தரப்பினருமே.
இல்லையெனில் வெற்றிக் கனி எட்டாக் கனியாகிவிடும்!

