ஞாயிற்றுக்கிழமை சிலேத்தார் விரைவுச்சாலையில் அப்பர் தாம்சன் சாலை வெளிவழிக்கு முன்னர் கார் மோதியதால் காட்டுப் பன்றி ஒன்று மாண்டது.
எஸ்ஜி ரோட் விஜிலான்டி பதிவேற்றம் செய்த 35 விநாடிக் காணொளியில், விரைவுச்சாலையில் காட்டுப் பன்றி ஒன்று விரைந்து செல்வதைக் காணமுடிகிறது.
முதலில் வலப்புற இரண்டாம் தடத்தில் கார் ஒன்று அதனை இடித்தது. பின்னர் ஆக வலத்தடத்தில் கருப்பு கார் அதனை மோதியது. சம்பவத்தில் கருப்பு காரின் ஒரு பகுதி கழன்று வெளியே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
புக்கிட் தீமாவை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் பிற்பகல் மணி 1.13க்கு நடந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
ஆணையத்தின் அதிகாரிகளும் விரைவுச்சாலை கண்காணிப்பு ஆலோசனைக் கட்டமைப்பின் வாகன மீட்பு ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார்.
மாண்ட காட்டுப் பன்றியின் உடலை அப்புறப்படுத்தி போக்குவரத்து மீண்டும் சீராவதற்கு அவர்கள் உதவினர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் ஏதும் தரப்படவில்லை என்று தேசியப் பூங்காக் கழகம் கூறியது. பொதுவாக காட்டுப் பன்றிகள் விரைவாக ஓடக்கூடியவை என்று அதன் இணையத்தளம் குறிப்பிடுகிறது.


