குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் வனவிலங்கு பயணங்கள்

குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் வனவிலங்கு பயணங்கள்

2 mins read
e96ec99a-e0da-4e17-9194-1a6d3c87c12f
புதன்கிழமை (செப்டம்பர் 16) நடைபெற்ற பங்காளித்துவ அறிவிப்பு நிகழ்ச்சியில் (இடமிருந்து)  மண்டாய் வனவிலங்குக் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பென்னட் நியோ, மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங்,  சமூக உண்டியலின் நிர்வாக இயக்குநர் ஜாக் லிம். - படம்: கிறிஸ்டோ லியோன்

தேசிய சமூகச் சேவை மன்றத்தின் நன்கொடை அமைப்பான சமூக உண்டியலும் மண்டாய் வனவிலங்குக் குழுமமும் இணைந்து வசதிகுறைந்த குடும்பங்கள் வனவிலங்குப் பூங்கா செல்லக் கூடுதல் வாய்ப்பை வழங்கவிருக்கின்றன.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 16) கையெழுத்தான பங்காளித்துவத்தின்கீழ், சமூகச் சேவை அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் 50,000 இலவச நுழைவுச்சீட்டுகள் வரை வழங்கப்படும். அவற்றின் மொத்த மதிப்பு ஏறக்குறைய $3 மில்லியன்.

இதன் மூலம் அதிகமான குடும்பங்கள் ஒன்றாக நேரத்தைச் செலவிட்டு, குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தவும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

“கட்டணம் செலுத்தும் பொழுதுபோக்கு சுற்றுலா நடவடிக்கைகளில் வசதிகுறைந்தோரும் ஈடுபட வாய்ப்பளிப்பது இந்தப் பங்காளித்துவத்தின் நோக்கம்,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங்.

“இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 400க்கும் மேற்பட்ட சமூகச் சேவை அமைப்புகளைச் சமூக உண்டியல் அணுகியுள்ளது. எதிர்காலத்தில் உடற்குறையுள்ளோரும் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தும்,” என்றார் அவர்.

“விலங்கியல் தோட்டத்துக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகள் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் வலுவான சமூகத்தை உருவாக்கவும் உதவுகின்றன. நன்கொடைகளைத் தாண்டி அனுபவங்கள் மூலம் தேவைப்படும் மக்களுக்கு எவ்வாறு அர்த்தமுள்ள உதவியை வழங்க முடியும் என்பதை நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும். சமூகங்களை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க, தொடர்ந்து செயல்படுவோம்,” என்றார் சமூக உண்டியலின் நிர்வாக இயக்குநர் ஜாக் லிம்.

முன்னர், சமூகச் சேவை அமைப்புகள் தங்களது பயனாளர்களை மண்டாய் வனவிலங்குப் பூங்காக்களுக்கு அழைத்துச் தனித்த ஏற்பாடுகளைச் செய்துவந்தன.

தற்போதைய பங்காளித்துவத்தின் மூலம், மண்டாய் வனவிலங்குக் குழுமம் சமூகச் சேவைத் துறைக்கு நேரடியாக ஆதரவு அளிக்கிறது.

“சமூக உண்டியலுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், அதிகமானோரைச் சென்றடைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. உடற்குறையுள்ளோரும் பயன்படுத்தக்கூடிய இடங்களையும் நிகழ்ச்சிகளையும் உருவாக்குவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்,” என்றார் மண்டாய் வனவிலங்குக் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பென்னட் நியோ.

“என் வேலையின் இயல்பு காரணமாகக் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது அரிது. விலங்கியல் தோட்ட நுழைவுச்சீட்டுகளுக்கான கட்டணம் அதிகம். இதுபோன்ற திட்டங்களால் கட்டணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் என் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடிகிறது,” என்றார் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாரான திருமதி மெலீன் சான், 41.

“வனவிலங்குப் பூங்காக்களுக்குச் செல்வது பரபரப்பான அன்றாட வாழ்க்கையிலிருந்து சிறிது ஓய்வு அளிக்கிறது. எனது கணவரின் வருமானத்தில் இதுபோன்ற சுற்றுலாக்கள் செல்வது சிரமம். இத்திட்டம் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் ஒரு குழந்தைக்குத் தாயாரான திருமதி ஜன்னா.

திருமதி ஜன்னாவும் (வலது) அவரின் குடும்பமும்.
திருமதி ஜன்னாவும் (வலது) அவரின் குடும்பமும். - படம்: கிறிஸ்டோ லியோன்

வசதிகுறைந்த சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் பணிகளில் மண்டாய் வனவிலங்குக் குழுமம் தனது ஊழியர்களையும் ஈடுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்