தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் அணுசக்தி பயன்பாடு குறித்து தொடர்ந்து ஆராயப்படும்

2 mins read
abcc86de-c3d7-4eee-a4be-5ee5b71d7aa4
எதிர்கால எரிசக்தி நிதிக்குக் கூடுதலாக $5 பில்லியன் நிரப்பப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்த அளவிலான கரிம வெளியேற்ற எரிசக்திகளில் அணுசக்தியும் ஒன்று என்றும் இது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றும் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து 2010ஆம் ஆண்டில் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அணுசக்தி தொழில்நுட்பங்கள் சிங்கப்பூருக்கு உகந்தவை அல்ல என்று முடிவெடுக்கப்பட்டதாகத் திரு வோங் தெரிவித்தார்.

இருப்பினும், அணுசக்தி மேம்பாடுகள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டதாகவும் சிங்கப்பூருக்கான தெரிவுகளை விரிவுபடுத்த கடந்த பத்தாண்டுகளாக அணுசக்திப் பாதுகாப்பு ஆற்றல்கள் படிப்படியாகக் அமைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

அணுசக்தி தொழில்நுட்பங்களில் முக்கிய மேம்பாடுகளைக் கண்டுள்ளதைச் சுட்டிய பிரதமர் வோங், சிறிய அணு உலைகளை உதாரணமாகக் காட்டினார்.

வழக்கமான அணு உலைகளைவிட சிறிய அணு உலைகள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதாக திரு வோங் கூறினார்.

சில சிறிய அணு உலைகள் பயன்பாட்டில் உள்ளன என்றும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகளவில் அணுசக்தி மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் வோங், தென்கிழக்காசியாவில் பல நாடுகள், தற்போது பயன்படுத்தப்படும் எரிசக்தியுடன் அணுசக்தியையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அணுசக்தி தொழில்நுட்பங்களில் மலேசியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் அனுபவம் இருப்பதாக திரு வோங் கூறினார்.

சிங்கப்பூரில் அணுசக்தி பயன்பாடு குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராயும் என்று பிரதமர் வோங் உறுதி அளித்தார்.

அதற்கான ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

அதன்படி, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் சிங்கப்பூர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் வோங் கூறினார்.

சிவில் அணுசக்தி பயன்பாட்டில் அனுபவம் கொண்ட மற்ற நாடுகளுடனும் ஒத்துழைத்து, இணைந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க அரசாங்கம் தன்னை மறுசீரமைத்துக்கொள்ளும் என்று திரு வோங் கூறினார்.

அணுசக்தியை பாதுகாப்பான, குறைந்த செலவில் பயன்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வட்டார நாடுகளில் அணுசக்தி மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த தேவையான ஆற்றல்கள் மிகவும் முக்கியம் என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.

அணுசக்தி, மின்சார இறக்குமதி, ஹைட்ரோஜன் என எதுவாக இருந்தாலும் புதிய உள்கட்டமைப்பு தொடர்பாக பேரளவில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்றார் அவர்.

இதற்காகவே எதிர்கால எரிசக்தி நிதி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் $5 பில்லியன் நிரப்பப்படும் என்றும் சிங்கப்பூருக்குப் பசுமை எரிசக்தியைப் பெறுவதற்கு இந்நிதி கூடுதல் ஆதரவு வழங்கும் என்றும் திரு வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்