நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக $15,000 அபராதத்தைத் தாம் செலுத்தவிருப்பதாக திரு லி ஷெங்வூ கூறியுள்ளார்.
ஆனால், தாம் குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று சொன்னார் மறைந்த திரு லீ குவான் இயூவின் பேரனும் திரு லீ சியன் யாங்கின் மகனுமாவார் திரு லி.
அபராதத்தைச் செலுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் வேளையில், ஃபேஸ்புக் பதிவு மூலம் திரு லி நேற்று இதனைத் தெரிவித்தார்.
அமைதியையும் நிம்மதியையும் காக்க வேண்டி தாம் அபராதத்தைச் செலுத்த முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.
"அபராதம் செலுத்துவதன் மூலம், சிங்கப்பூர் அரசாங்கம் தம்மையும் தமது குடும்பத்தையும் சுலபமாகத் தாக்குவதற்குக் காரணம் கூறுவதைத் தவிர்க்க முடியும்," என்றார் அவர்.
"தனிப்பட்ட பேச்சு சுதந்திரத்தை அடக்கி வைக்க அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதே உண்மையான பழிச்சொல்," என்று திரு லி குறிப்பிட்டிருந்தார்.
தனிப்பட்ட வகையில், தமது நண்பர்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பதிவில் தாம் பதிவுசெய்த கருத்துகளை இன்னமும் தாம் மறுக்கவில்லை என்றும் அதற்கான குற்றத்தைத் தாம் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றும் திரு லி கூறினார்.
அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் திரு லி. நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் நிரூபணமானதைத் தொடர்ந்து கடந்த மாதம் அவருக்கு $15,000 அபராதம் விதிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இரு வாரங்களுக்குள் அபராதத்தைச் செலுத்த திரு லிக்கு உத்தரவிடப்பட்டது. இல்லாவிடில், ஒரு வார சிறைத் தண்டனையை அவர் நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டது.
மேலும் , சட்ட நடவடிக்கைக்கான செலவாக $8,500 மற்றும் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் சம்பந்தப்பட்ட செலவாக $8,070.69 ஆகியவற்றைச் செலுத்தவும் திரு லிக்கு உத்தரவிடப்பட்டது.

