ஆர்டிஎஸ் ரயில் இணைப்பும் சிங்கப்பூருக்கு மலேசியர்களை ஈர்க்கும் சாத்தியக்கூறுகளும்

ஆர்டிஎஸ் ரயில் இணைப்பும் சிங்கப்பூருக்கு மலேசியர்களை ஈர்க்கும் சாத்தியக்கூறுகளும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2026 - 8:00 am

3 mins read

ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை மாலையில், பல சிங்கப்பூரர்கள் கடற்பாலம் வழியாக (காஸ்வே) ஜோகூர் பாரு நோக்கிச் செல்லச் சிக்கித் தவிக்கும் வேளையில், கோலாலம்பூர்வாசியான ஃபரித் யாக்கோப், 39 எதிர் திசையில் எளிதாகக் கடந்து செல்கிறார்.

சிங்கப்பூர் டாலரின் மதிப்பு வலுவாக இருந்தாலும், கோலாலம்பூரிலிருந்து 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து, உணவு, சிற்றுண்டிகள் மற்றும் வார இறுதி நிகழ்வுகளுக்காகத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு வருகிறார் திரு. ஃபரித்.

தொழில்முனைவரான இவர் சிங்கப்பூரில் எங்கே குறைவான கட்டணத்தில் வாகனங்களை நிறுத்தலாம் என்பதை நன்கறிந்துள்ளார்.

“சில நேரங்களில், சிங்கப்பூரர்களை விட எனக்குச் சிங்கப்பூரைப் பற்றி நன்கறிந்தது போலத் தோன்றும்,” என்றார் அவர். எடுத்துக்காட்டாக, சென்தோசாவில் உள்ள ‘இம்பியா லுக்அவுட்’ வாகன நிறுத்துமிடத்தில், மாலை 5 மணிக்கு மேல், மணிக்கு 2.20 வெள்ளி எனும் கட்டணம் குறைந்து, 4 வெள்ளி என்ற நிலையான கட்டணமாகும் என்பது அவருக்குத் தெரியும்.

சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனம் உள்ளிட்ட மூன்று வணிக அமைப்புகளின் வேண்டுகோளின் பேரில் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2027 பிப்ரவரியில் சிங்கப்பூர் - ஜோகூர் பாரு விரைவுப் போக்குவரத்து இணைப்பு (RTS Link) செயல்பாட்டுக்கு வரும்போது, ஒருநாள் வந்துசெல்லும் சுற்றுப்பயணிகளின் மூலம்​​ சிங்கப்பூருக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 756 மில்லியன் வெள்ளி வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளால் ஜோகூருக்கு ஆண்டுதோறும் 1.05 பில்லியன் வெள்ளி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகூர் பாருவில் புக்கிட் சாகர் நிலையத்திலிருந்து உட்லண்ட்ஸ் வடக்கு நிலையம் செல்லும் முதல் ஆர்டிஎஸ் இணைப்பில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் திரு ஃபரித்.

முக்கிய சுற்றுலாத் தலங்களை விட, சாலையோர உணவு, இறக்குமதி செய்யப்பட்ட மளிகைப் பொருள்கள், உள்ளூர் பொதுப் பூங்காக்களில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் பெரும்பாலும் மக்களை ஈர்ப்பதாக அடிக்கடிப் பயணம் மேற்கொள்பவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மலாக்காவைச் சேர்ந்த நூர்’அஃபியா பின்டி ஹாஜி அகமது கமல்,38 அக்டோபர் 4ஆம் தேதி பிரியாணி, முர்தபாக் சாப்பிடச் சிங்கப்பூர் வந்ததைப் பகிர்ந்திருந்தார்.

பூகிஸ் வட்டரத்தில் உள்ள சிங்கப்பூர் ஸம்ஸம் உணவகம், தேக்கா நிலையம், கோல்டன் மைல் உணவு நிலையத்திற்குத் தம் குடும்பத்துடன் வருவதாக அவர் கூறினார். “மலேசியாவிலும் முர்தபாக் இருந்தாலும், ஒவ்வொரு இடத்திற்கும் தனித்துவமான சுவையும் தயாரிப்பு முறையும் உள்ளது,” என்றார் அவர்.

இப்பதிவு, மலேசியர்கள் ஏன் அதிகமாகக் செலவாகும் எனக் கருதப்படும் சிங்கப்பூருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்கள் எனும் கேள்வியை எழுப்பியது.

இங்கு இறக்குமதி பழங்கள் மலிவாக உள்ளதாகச் சிங்கப்பூரில் பணிபுரியும் ஜோகூரைச் சேர்ந்த சுற்றுலா நிர்வாகி லூ யோங் டாட்,37 கூறினார்.

மலேசிய வாடிக்கையாளர்கள் சிங்கப்பூரில் கிடைக்கும் பல்வேறு இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்கள், தின்பண்டங்கள், ‘ஸ்கார்லெட்’ உள்ளிட்ட கடைகளில் விற்கப்படும் சீன மளிகைப் பொருள்கள் ஆகியவற்றையும் விரும்புகின்றனர்.

கோலாலம்பூரைச் சேர்ந்த லீ டக் செங், 35 சிங்கப்பூர்ப் பூமலை, பிடோக் உணவங்காடி நிலையம், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றைப் பாராட்டினார்.

சிங்கப்பூர் வணிகங்களைப் பொறுத்தவரை, எளிதான அணுகல் என்பது மலேசிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதற்கும், அவர்கள் அதிக அளவில் செலவு செய்வதற்கும் வழிவகுக்குமா என்பதே கேள்வி.

யுனிக்ளோ ஆடைகள், ஃபேர்பிரைஸ் காபி போன்றவை மலேசியாவைவிட இங்கு மலிவாக உள்ளதாகச் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகச் சந்தைப்படுத்தல் திட்டத் தலைவர் இணைப் பேராசிரியர் லாவ் காங் சீன் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள ஹைக் ரோடு சந்தை, உணவங்காடி நிலையத்தில், ‘மீ சியாம்’, மசாலா தேநீருடன் ஃபரித் யாகூப்.
சிங்கப்பூரில் உள்ள ஹைக் ரோடு சந்தை, உணவங்காடி நிலையத்தில், ‘மீ சியாம்’, மசாலா தேநீருடன் ஃபரித் யாகூப். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த வேகமான போக்குவரத்து இணைப்பு, ஜோகூர் மக்கள் மற்றும் மலாக்கா உள்ளிட்ட வடக்குப் பகுதிகளிலிருந்து வரும் பயனிகளுக்குச் சிங்கப்பூரை இன்னும் எளிதில் சென்றடையக்கூடிய இடமாக மாற்றக்கூடும் என்று தெரிவித்தார் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகச் சந்தைப்படுத்தல் திட்டத் தலைவர் இணைப் பேராசிரியர் லாவ் காங் சீன்.

இருப்பினும், அதிகரிக்கும் வாடகையால் மலேசிய வாடிக்கையாளர்களின் வருகை உயரும் எனச் சிங்கப்பூர் வணிகர்கள் பெரிதாக நம்பவில்லை.

பெறுந்தொற்றுக் காலத்துக்கு முன்பைவிட மலேசிய வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகச் சிங்கப்பூர் விருந்தோம்பல் குழும நிறுவனர் அலி அப்பாஸ் கூறினார். சைனாடவுன் வளாக உணவங்காடிகளில் 20 முதல் 30 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மலேசியர்கள் என அதன் சங்கத் தலைவர் கார்னீலியஸ் டான் தெரிவித்தார்.

குறிப்பாக ஜோகூர் மக்களுக்கு, கோலாலம்பூரில் உள்ள வணிகப் பகுதிக்குச் செல்ல நான்கு முதல் ஐந்து மணிநேரம் தேவைப்படுகிறது. எனவே, அதிநவீன மின்னணு சாதனங்கள், உயர்தரப் பொருட்களை வாங்குவதற்கு, சிங்கப்பூர் அவர்களுக்கு மிக அருகில் உள்ள ஒரு வசதியான இடமாக அமைகிறது.

குறிப்புச் சொற்கள்