வீட்டு சன்னல்களைச் சுத்தம் செய்யும்போது வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் அதுதொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதிசெய்யாத முதலாளிகள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 15 முதலாளிகள் பிடிபட்டனர்.
2016ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 12ஆக இருந்தது.
இந்த ஆக அண்மைய புள்ளிவிவரங்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 14) நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக வெளியிட்டார்.
ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங்கும் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிசால் வான் ஸக்காரியாவும் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவை இருந்தன.
கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று 39 வயது பணிப்பெண் ஒருவர் தோ பாயோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் மாண்டு கிடந்தார்.
வீட்டுச் சன்னல்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அவர் மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது. இதுகுறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்துகிறது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 26 வயது இந்தோனீசியப் பணிப்பெண் மருத்துவமனையில் மாண்டார். ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அவர் மாண்டு கிடந்தார். அவரும் சன்னல்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பத்தாண்டுகளில் ஆறு முதலாளிகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டாக்டர் டான் தெரிவித்தார். அவர்களது கவனக்குறைவு காரணமாகப் பணிப்பெண்கள் உயரத்திலிருந்து விழுந்ததை அவர் சுட்டினார்.
“இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து கண்காணிப்போம். தேவை ஏற்பட்டால் இவை தொடர்பான விழிப்புணர்வு, அமலாக்கப் பணிகளைத் தீவிரப்படுத்துவோம்,” என்றார் அமைச்சர் டான்.