ஒரு தொகுதியின் வெற்றி இளையரை ஈர்க்க பிஎஸ்பிக்கு உதவும்: ஹேஸல் புவா

2 mins read
8016500c-4d4f-43b2-962a-c9c0f788533c
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேர்காணலில் பங்கேற்ற திருவாட்டி ஹேஸல் புவா. அருகில் அவரது கணவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ

ஒரு தொகுதியை வெல்வது தங்களது கட்சி இளைய திறனாளர்களை ஈர்க்கக் கைகொடுக்கும் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) துணைத் தலைவர் ஹேஸல் புவா தெரிவித்து உள்ளார்.

திருவாட்டி புவா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

கட்சியில் பெரும்பாலானோர் மூத்த வயதினராக உள்ளார்கள் என்ற பிம்பத்தை உடைக்க சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி என்ன செய்யப் போகிறது என்று கேட்கப்பட்டதற்கு அவர் மேற்கண்ட பதிலை அளித்தார்.

தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க இளையோரைத் தேடுவதில் சிரமம் இருந்ததாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வரும் பொதுத் தேர்தலுக்காக அந்தக் கட்சி அறிமுகம் செய்த வேட்பாளர்கள் வயதில் மூத்தவர்களாக இருந்ததன் தொடர்பில் அவர் அந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி போன்றவை அறிமுகம் செய்த வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் பிஎஸ்பி வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே 40 வயதுக்கு உட்பட்டவர்.

எஞ்சியோரின் சராசரி வயது மற்ற இரு கட்சிகளின் வேட்பாளர்களின் சராசரி வயதைவிட அதிகம்.

அந்த ஒருவர் பிஎஸ்பி வேட்பாளராக பைனியர் தனித்தொகுதியில் களம் இறங்குவார் என்று நம்பப்படும் திருவாட்டி ஸ்டெஃபனி டான். அவரின் வயது 37.

“இளைய வாக்காளர்களைச் சந்திக்க முயன்று வருகிறோம். வேட்பாளர்களாகக் களமிறக்க நாடும்போது, பொதுவாக அவர்களிடம் தயக்கம் காணப்படுகிறது.

“எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டால் தங்களது வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்று பெரும்பாலான இளையர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

“வரும் தேர்தலில் ஒரு தொகுதியில் வென்றுவிட்டால் அந்தத் தடையை உடைக்க அது கட்சிக்கு உதவும். வருங்காலத்தில் அதிகமானோர் எங்களுடன் இணைந்து வேட்பாளராவதற்கும் அது வழிவகுக்கும்,” என்றார் திருவாட்டி புவா.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேர்காணலின்போது திருவாட்டி புவாவின் கணவர் டோனி டானும் உடனிருந்தார். வரும் தேர்தலில் கெபுன் பாரு தனித்தொகுதி பிஎஸ்பி வேட்பாளராக அவர் கருதப்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்