ஜெர்மனியில் தற்போது நொடித்துப்போன ‘வயர்கார்ட்’ மற்றும் அது சார்ந்த மின்கட்டணச் சேவை நிறுவனங்கள் தொடர்பான மோசடியில் ஈடுபட்ட சிங்கப்பூரரான 59 வயது ஆர். சண்முகரத்னத்துக்குப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர், $1.7 பில்லியன் (1.1 பில்லியன் பவுண்ட்) மதிப்பிலான நிதிக்கான வைப்புத்தொகை சிட்டடெல் நிறுவனத்திடம் உள்ளதாகப் போலியாக 13 உறுதிக் கடிதங்களை வழங்கினார்.
அக்குற்றத்திற்காக 13 மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அவர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு உடந்தையாக ஐந்து கடிதங்களை எழுதி ஆவணங்களைச் சமர்ப்பிக்க உதவிய, பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹென்றி ஓ சலிவன், 50, என்ற ஆடவருக்கு 6 ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரும் குற்றவாளி என ஏற்கெனவே தீர்ப்பானது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவ்விருவரும் ஒப்புக்கொண்டனர்.
2016ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொய்யான ஆவணங்களை சிட்டடெல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான சண்முகரத்னம் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்து உறுதிக் கடிதங்களை அவர் வெளியிட ஓ சலிவன் உதவியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

