தஞ்சோங் பகார் மக்கள் தங்கள் ஆதரவை அளிக்கவில்லை எனில், திரு லீ குவான் யூ அத்தொகுதி எம்.பி. ஆகியிருக்க முடியாது, சிங்கப்பூரின் முதலாவது பிரதமராகவும் ஆகியிருக்க மாட்டார் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
“இங்குதான் எல்லாம் தொடங்கியதாக நினைக்கிறேன். சொல்லப்போனால் தஞ்சோங் பகார் வட்டாரம் இல்லையென்றால் இன்றிருக்கும் சிங்கப்பூர் இல்லை,” என்றும் அவர் கூறினார்.
நோன்புப் பெருநாளையொட்டி சனிக்கிழமை (மார்ச் 29) தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் நடந்த வசதி குறைந்த குடும்பங்களுக்குப் பரிசுப்பை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான குமாரி இந்திராணி இவ்வாறு சொன்னார்.
“வாழ்க்கைச் செலவினம் குறித்து அனைவரும் கவலைப்படுகின்றனர். அதற்காக இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பல்வேறு ஆதரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிடிசி பற்றுச்சீட்டுகள், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளுடன் சிங்கப்பூரின் அறுபதாவது ஆண்டை முன்னிட்டு எஸ்ஜி 60 பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படவுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
தங்களுக்கும் தஞ்சோங் பகார் குடியிருப்பாளர்களுக்கும் வலுவான நெருக்கமான உறவு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “மக்களின் தேவைகள், சிரமங்களைக் கேட்டறிவது, அதற்குரிய தீர்வை நோக்கிப் பணியாற்றுவது, உள்கட்டமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பது உள்ளிட்டவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என நினைக்கிறேன்,” என்றும் சொன்னார்.
அதற்காகத் தொடர்ந்து கடின உழைப்பை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார் அமைச்சர் இந்திராணி.
‘ஆரஞ்சுடீ’ நிறுவனம், ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்புடன் கைகோத்து ‘ரமதான் கேர் பெஸ்டிவல்’ எனும் 500 வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு, மளிகைப் பொருள்கள் அடங்கிய பரிசுப்பை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன் முதல் 20 பயனாளிகளுக்குப் பரிசுப்பைகளையும் அமைச்சர் இந்திராணி வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அரிசி, மளிகைப்பொருள்கள், தின்பண்டங்கள் என ஏறத்தாழ 40 வெள்ளி மதிப்புள்ள பைகளை பயனாளிகளின் குடும்பங்களிடம் கொண்டு சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடந்து இப்பணிகளை மேற்கொண்டு வருவதாகச் சொன்ன ஆரஞ்சுடீ நிறுவனத்தின் மூத்த இணை இயக்குநர் எம்.எஃப். தீன், அதற்காக ஏறத்தாழ 17 முதல் 18 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டதாகவும் சொன்னார்.
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு குடியிருப்பு வட்டாரங்களில் இதனைச் செய்து வருவதாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என விரும்புவதாகவும் திரு தீன் குறிப்பிட்டார்
மேலும், இன வேறுபாடின்றி இந்தப் பரிசுப்பைகள் வழங்கப்படுவதாகவும், ‘ரே ஆஃப் ஹோப்’ அமைப்பும் இதற்குத் துணை நின்றதாகவும் அவர் சொன்னார்.
இதற்குப் பங்களித்ததிலும், இவ்விழாவில் பங்கேற்றதும் மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான முஹம்மது இர்ஷாத்.
‘ஆரஞ்சுடீ’ நிறுவனம் தங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை மேற்கொள்ள அழைத்தபோது மனமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டதாகவும், இது மனநிறைவைத் தருவதாகவும் அவர் சொன்னார்.
ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது சிங்கப்பூரர்களின் பண்பு என்றும் நோன்புக் காலங்களில் வசதி குறைந்தவர்கள் குறித்து சிந்திக்கவும், தங்களால் இயன்றவரை சமூகத்திற்குத் திரும்ப வழங்கவும் சமூக அமைப்புகள் மட்டுமல்லாது நிறுவனங்களும் முன்வருவது வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் இந்திராணி கூறினார்.