2022ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட வோல்பாக்கியா திட்டம், 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 3,798 டெங்கி பாதிப்புகளைத் தடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மொத்த பாதிப்புகளில் இது கிட்டத்தட்ட 28 விழுக்காடு எனத் தேசியச் சுற்றுப்புற வாரியமும் அனைத்துலக ஆய்வாளர்களும் இணைந்து உருவாக்கிய நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கணிக்கும் மாதிரியிலிருந்து மேற்குறிப்பிட்ட தகவல்கள் பெறப்பட்டன
பருவநிலைத் தரவுகள், நான்கு வகையான டெங்கி கிருமி வகைகள் அல்லது திரிபுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
2022ஆம் ஆண்டில் வோல்பாக்கியா திட்டம் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்திருந்தால், 2023ஆம் ஆண்டில் டெங்கி பாதிப்புகளின் எண்ணிக்கை 13,748ஆக இருந்திருக்ககூடும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் பலனாக 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 9,950 டெங்கி சம்பவங்கள் பதிவானதாகவும் அவற்றில் நோய்யின் தீவிரம் காரணமாக அறுவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில், வோல்பாக்கியா திட்டத்தை ஐந்து இடங்களிலிருந்து கூடுதலாக எட்டு இடங்களுக்குத் தேசியச் சுற்றுப்புற வாரியம் விரிவுபடுத்தியது.
அதில், ஹவ்காங், சுவா சூ காங், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட வட்டாரங்கள் அடங்கும். இந்த விரிவாக்கத்தின் மூலம் 3,00,000க்கும் அதிகமான குடியிருப்புகள் வோல்பாக்கியா திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன.
டெங்கிப் பரவலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்குள் அத்திட்டம் சிங்கப்பூரில் இருக்கும் 50 விழுக்காடு குடியிருப்புகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
அதன் மூலம் கிட்டத்தட்ட 8,00,000க்கும் அதிகமான குடும்பங்கள் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

