மேலும் ஐந்து வட்டாரங்களுக்கு விரிவடையும் ‘வோல்பாக்கியா’ திட்டம்

மேலும் ஐந்து வட்டாரங்களுக்கு விரிவடையும் ‘வோல்பாக்கியா’ திட்டம்

2 mins read
1abfebfe-1ac5-4cda-a573-33d5d5d0de4c
ஏப்ரல் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே, அந்தத் திட்டம் புக்கிட் பாஞ்சாங், லிட்டில் இந்தியா, பைனியர், தோ பாயோ, அங் மோ கியோ ஆகிய இடங்களில் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் அக்டோபர் மாதத்துக்குள், ‘வோல்பாக்கியா’ திட்டத்தால், 800,000க்கும் அதிகமான குடும்பங்கள் பாதுகாக்கப்படும்.

கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி டெங்கிப் பரவலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அந்தத் திட்டம் மேலும் ஐந்து வட்டாரங்களுக்கு நீட்டிக்கப்படவிருக்கிறது.

இவ்வாண்டு இறுதிக்குள் இங்குள்ள 50 விழுக்காட்டுக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான தனது இலக்கை தேசியச் சுற்றுப்புற வாரியம் விஞ்சிவிடும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.

ஏப்ரல் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே, அந்தத் திட்டம் புக்கிட் பாஞ்சாங், லிட்டில் இந்தியா, பைனியர், தோ பாயோ, அங் மோ கியோ ஆகிய இடங்களில் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வாரியம் தெரிவித்தது.

ஏற்கெனவே, புக்கிட் பாத்தோக், தெம்பனிஸ், சிராங்கூன் ஆகிய பகுதிகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

அந்தத் திட்டம் ஏப்ரலில் புக்கிட் பாஞ்சாங், லிட்டில் இந்தியா, பைனியர் ஆகிய பகுதிகளில் தொடங்கும். வரும் ஜூன் மாதம், தோ பாயோவிலும் வரும் அக்டோபர் மாதம் அங் மோ கியோவிலும் அது நடைமுறைப்படுத்தப்படும்.

ஒவ்வொரு பகுதியிலும், வாரத்திற்கு இருமுறை காலையில் ‘வோல்பாக்கியா’ கொசுக்கள் விடுவிக்கப்படும். குடியிருப்பாளர்களுக்குத் தகவல் பதாகைகள், சுவரொட்டிகள் மூலம் முன்கூட்டியே அது பற்றித் தெரிவிக்கப்படும்.

கொசுக்கள் விடுவிக்கப்படும் நேர அட்டவணை வாரியத்தின் இணையத்தளத்திலும் கிடைக்கப்பெறும். கூடுதல் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்று வாரியம் கூறியது.

ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்படும் ஆண் கொசுக்கள் ‘வோல்பாக்கியா’ கிருமியை ஏந்திச் செல்லும். அவை குடியிருப்புப் பகுதிகளில் விடுவிக்கப்படும்போது பெண் கொசுக்களுடன் இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டால், அந்தப் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்கமாட்டா.

குறிப்புச் சொற்கள்