மேலும் நான்கு குடியிருப்புப் பகுதிகளில் ‘வொல்பாக்கியா’ திட்டம்

2 mins read
57b7bd1f-590e-4270-a510-917caa5fec5b
மார்சிலிங், உட்லண்ட்ஸ், காக்கி புக்கிட்-கெம்பாங்கான், பிடோக் ஆகிய வட்டாரங்களில் ‘வொல்பாக்கியா’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் விதமாகவும் டெங்கிப் பரவலை முறியடிக்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட ‘வொல்பாக்கியா’ திட்டம் (Project Wolbachia) மேலும் நான்கு குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த நடவடிக்கை டிசம்பர் மாதம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

மார்சிலிங், உட்லண்ட்ஸ், காக்கி புக்கிட்-கெம்பாங்கான் வட்டாரங்களில் டிசம்பர் 16ஆம் தேதியும் பிடோக் வட்டாரத்தில் டிசம்பர் 17ஆம் தேதியும் ‘வொல்பாக்கியா’ திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

இதன்மூலம் சிங்கப்பூரில் 660,000 குடும்பங்கள், ‘வொல்பாக்கியா’ திட்டத்தின்கீழ் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சிங்கப்பூரில் உள்ள 50 விழுக்காடு குடும்பங்களை ‘வொல்பாக்கியா’ திட்டத்தின்கீழ் பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். தற்போது அதன் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறோம்,” என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்கள் ‘வொல்பாக்கியா’ கிருமியை ஏந்திச் செல்லும். அவை குடியிருப்புப் பகுதிகளில் விடப்படும்போது பெண் கொசுக்களுடன் இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடுபடும். இதனால் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்காது. கருவுற்றாலும் அதன் முட்டைகள் மூலம் குஞ்சு பொரிக்க முடியாது.

டெங்கிப் பரவல் ஆபத்து இருக்கும் பகுதிகளில் ‘வொல்பாக்கியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

‘வொல்பாக்கியா’ திட்டம் 2022ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. அதன் பிறகு சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் 70 விழுக்காடு வரை குறைந்தன. மேலும் பல இடங்களில் 90 விழுக்காடு வரை கொசுக்களின் எண்ணிக்கையும் குறைந்தன.

சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதிவரை மட்டும் 2,219 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்.

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 10,000 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின.

குறிப்புச் சொற்கள்