தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வோல்பாக்கியா திட்டம்: 2026க்குள் நாட்டில் உள்ள 50 விழுக்காடு வீடுகள் பலனடையும்

2 mins read
d278edda-4dd9-4d5c-aa3c-5facbc360c74
எட்டாவது சிங்கப்பூர் அனைத்துலக டெங்கி பயிலரங்கின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, வோல்பாக்கியா திட்டத்தின் நீட்டிப்பை அறிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து டெங்கியால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வோல்பாக்கியா திட்டம் நீட்டிக்கப்படுகிறது.

இத்திட்டம் மூலம் வோல்பாக்கியா கிருமியுள்ள ஆண் கொசுக்கள் விடுவிக்கப்படுகின்றன.

வோல்பாக்கியா கிருமியுள்ள ஆண் கொசுக்கள் ஏடிஸ் கொசுக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்போது அவற்றின் முட்டைகள் பொரியமாட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் மூலம் 2026ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் உள்ள 50 விழுக்காட்டு வீடுகள் பலனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோல்பாக்கியா திட்டம் கிட்டத்தட்ட 800,000 வீடுகளைச் சென்றடையும்.

தற்போது ஏறத்தாழ 520,000 வீடுகள் இத்திட்டம் மூலம் பலனடைகின்றன.

வோல்பாக்கியா திட்டம் நீட்டிக்கப்படுவது குறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ திங்கட்கிழமையன்று (நவம்பர் 25) அறிவித்தார்.

எட்டாவது சிங்கப்பூர் அனைத்துலக டெங்கி பயிலரங்கின் திறப்பு விழாவில் இதுகுறித்து அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சி ஜென் சிங்கப்பூர் தங்ளின் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கு வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) வரை நடைபெறுதிறது.

பயிலரங்கிற்கு உலகச் சுகாதார நிறுவனம், தேசிய சுற்றுப்புற வாரியத்தின் சுற்றுப்புற சுகாதாரக் கழகம், வெளியுறவு அமைச்சு, தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

வோல்பாக்கியா திட்டம் 2016ஆம் ஆண்டில் தொடங்கியது.

வோல்பாக்கியா கொசுக்கள் விடுவிக்கப்பட்ட வட்டாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் டெங்கியால் பாதிக்கப்படும் சாத்தியம் 75 விழுக்காடு குறைவு என்று அண்மையில் தேசிய சுற்றுப்புற வாரியம் நடத்திய ஆய்வு காட்டுவதாக அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.

அந்த வட்டாரங்களில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை 80லிருந்து 90 விழுக்காடு வரை சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
டெங்கிகொசுவோல்பாக்கியா