சைனாடவுனில் வழிப்பறித் திருடனிடம் $600 பறிகொடுத்த மாது

சைனாடவுனில் வழிப்பறித் திருடனிடம் $600 பறிகொடுத்த மாது

1 mins read
7e00d958-2754-4aa0-a1a3-52b89512feeb
சைனாடவுனின் டெம்பிள் ஸ்திரீட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) காணப்பட்ட கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சைனாடவுனின் டெம்பிள் ஸ்திரீட்டில் வழிப்பறித் திருடனிடம் 60 வயது மாது ஒருவர் $600ஐ பறிகொடுத்த சம்பவம் ஜனவரி 11ஆம் தேதி நிகழ்ந்தது.

தம்மிடம் இருந்த கடன் அட்டைகள், அடையாள அட்டை உள்ளிட்ட உடைமைகளை அந்த மாது பறிகொடுத்தார்.

அந்த மாது பதற்றத்துடன் காணப்பட்டதைக் கவனித்த அங்கிருந்த ஒருவர், அவருக்கு உதவினார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தெரியப்படுத்திய அவர், ஷின் மின் சீன நாளிதழுக்கு தகவல் அளித்தார்.

தம்முடைய நண்பர்களுடன் இருந்த அந்த மாது, அப்போதுதான் சாப்பிட்டு முடித்தார்.

டெம்பிள் ஸ்திரீட் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் தம் கைப்பையை தொடுவதைப்போல அந்த மாது உணர்ந்தார். ஆனால், அதைப் பற்றி பெரிதாக எதையும் சிந்திக்காமல், அவர் தொடர்ந்து நடந்து சென்றார்.

வேறோர் உணவுக்காக பணம் செலுத்த கைப்பையைத் தேடியபோதுதான், பணமும் தனிப்பட்ட உடைமைகளும் பறிபோனதை அந்த மாது உணர்ந்தார்.

சைனாடவுன் சுற்றுவட்டாரத்தில் காவல்துறைக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதையும் 'வழிப்பறித் திருடர்களிடம் ஜாக்கிரதை' என்று காவல்துறையின் எச்சரிக்கை இடம்பெற்றிருப்பதையும் ஷின் மின் செய்தியாளர் கவனித்தார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவர் கூறுகையில், "குறைவான குற்றங்கள் என்றால் குற்றமே இல்லை என்று அர்த்தமாகாது," என்றார்.

சீனப் புத்தாண்டையொட்டி சைனாடவுனில் கூட்டம் கூடும் என்பதால், பொதுமக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக்கொண்டு மானபங்கம் செய்பவர்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறும் காவல்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.