மோசடிகளில் ஈடுபட்டதாக 84 வயது பிரிட்டிஷ் மூதாட்டி மீது குற்றச்சாட்டு

2 mins read
3e1d7733-77ce-4c3e-9105-9fcbbcc7b628
டியோன் மேரி ஹன்னா. - படம்: இணையம்

மோசடிகளில் ஈடுபட்ட 84 வயது பிரிட்டிஷ் மூதாட்டி மீது சனிக்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

டியோன் மேரி ஹன்னா என்னும் அவர் மீது போலி வாக்குறுதிகள் மூலம் மூவரை ஏமாற்றியதாக ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மருத்துவமனை படுக்கையில் இருந்தவாறு அவர் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றார்.

முன்னதாக, அடுத்தடுத்து வந்த மோசடிப் புகார்களைத் தொடர்ந்து அந்த மூதாட்டி மார்ச் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

போலியான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சொத்துகளுக்கான வாரிசுரிமை ஆகியவற்றை அளிப்பதாக் கூறி அவர் பணம் வாங்கியதாக தனக்குப் புகார் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

வாக்குறுதிகளை நம்பி வந்தோர் வெளிநாட்டில் வங்கிக் கணக்குத் திறப்பதற்கான சட்டபூர்வக் கட்டணம் செலுத்த வங்கி மூலம் பணத்தை அனுப்புமாறு அவர் கூறி வந்தார்.

பிரான்சில் இரு குற்றங்களில் ஈடுபட்ட அந்த மூதாட்டி, சிங்கப்பூரில் இவ்வாண்டு பிப்ரவரி 17க்கும் மார்ச் 10க்கும் இடைப்பட்ட நாளில் மோசடியில் ஈடுபட்டார். தாம் புருணை அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பைமான் சுபாங்காட் என்பவரிடம் கூறினார்.

அவருக்கும் அவரது மகனுக்கும் தமது சொத்துகளை அளிக்க விரும்புவதாகவும் அதற்கான செலவுகளுக்குப் பணம் அனுப்புமாறும் அவர் கூறியிருக்கிறார்.

முகம்மது சயாபிக் பைமான் என்பவரையும் முகம்மது ஆரிஃபின் முகம்மது கவாஜா கமாலுதீன் என்பவரையும் அவர் இதேபோலக் கூறி ஏமாற்றி இருக்கிறார்.

தேடப்பட்டு வந்த மூதாட்டி, நெட்ஃபிளிக்ஸ்ஸில் வெளியான ஆவணப்படம் ஒன்றில் காணப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

ஐந்து மோசடிச் சம்பவங்களிலும் அவர் $200,000க்கும் மேல் மோசடி செய்ததாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்