கணவரைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்மீது குற்றச்சாட்டு

கணவரைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்மீது குற்றச்சாட்டு

2 mins read
17cff3de-c472-497e-8e2e-b9620ba32c14
படம்: - தமிழ்முரசு

தனது கணவரைக் கத்தியால் குத்திய 50 வயது பனியா ஷாப் மீது பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.

மத்திய காவல் பிரிவு அலுவலகத்திலிருந்து காணொளி மூலம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார். பனியா ஷாப், டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு ஆவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு 631, அங் மோ கியோ அவென்யூ 4 இன் அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளி நிற மடிப்புக் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்பட்டது.

அன்று, அதே நேரத்தில் பனியா ஷாப் தனது கணவரான 62 வயது முகமது அலி சாபானுடன் சண்டை போட்டுள்ளார். சண்டை வலுக்கவே அதன் விளைவாக ஷாப் வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

அவர், எந்த இடத்தில் குத்தினார், காயத்தின் ஆழம் போன்ற விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை.

திரு அலி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததாகவும் அடுத்த நாள் அவர் இறந்துவிட்டதாகவும் காவல்துறையினர் முன்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினர்.

பனியாவுக்காக வழக்குரைஞர் யாரும் முன்னிலையாகவில்லை. தன்னைப் பிணையில் விடுவிக்கும்படி அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

விசாரணையின் போது அவர் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் அதனால் அவருடைய கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காக அவரை மனநலக் கழகத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரது வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்