தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புற்றுநோயாளியை ஏமாற்றியதாக மாதுமீது குற்றச்சாட்டு

2 mins read
d90d589b-e0fd-4150-99c6-35847e08686a
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவரை ஓங் மே லிங் என்ற மாது $24,000க்குமேல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.  - படம்: பிக்சாபே

சிங்கப்பூரில், ஓங் மே லிங் என்ற மாது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவரை $24,000க்குமேல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

உடல்நிலையை மேம்படுத்தக்கூடிய ஊசிகள் உட்பட மற்ற பொருள்களையும் தம்மால் பெற்றுத்தர முடியும் என்று ஓங் அந்த ஆடவரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னர் ஆறு நிறுவனங்களை நடத்திவந்த 62 வயதான ஓங்கின்மீது வியாழக்கிழமை ஏமாற்றுக் குற்றங்கள் தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஆடவரின் தற்போதைய உடல்நிலை குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. அவர் சிறுகுடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

புற்றுநோய்க்கான மூன்று ஊசிகளை வாங்க தம்மால் உதவமுடியும் என்று கூறி, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, ஓங் அந்த ஆடவரிடமிருந்து $5,500 பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதோடு உள்ளூர் ஆய்வகம் ஒன்றில் தம்மால் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யமுடியும் என்று கூறி, ஆடவரிடமிருந்து $10,000க்குமேல் பெற்றதாகவும் ஓங்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் ஆய்வகம் அமெரிக்க டாலரில் கட்டணம் செலுத்துச் சொல்வதாகக் கூறினார் ஓங். அந்த ஆடவரிடமிருந்து மேலும் ஏறக்குறைய $4,553ஐயும் அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்த மாதம், பகுப்பாய்வை மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள மருத்துவ நிபுணர் ஒருவருக்கு இரண்டு ஐஃபோன்கள் தேவைப்பட்டதாக ஓங் அந்த ஆடவரிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி அந்த ஆடவரை $4,200 ஏமாற்றியதாக ஓங்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவருடைய வழக்கு விசாரணை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றுக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்