ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியன்று ஹேவ்லாக் பகுதியில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில், 13 வயதுச் சிறுமியைத் துன்புறுத்தியதாக 47 வயது பெண் கைது செய்யப்பட்டார். அந்தச் சிறுமி அப்பெண்ணின் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
2 ஹேவ்லாக் சாலையில் உள்ள ஹேவ்லாக் 2 கடைத்தொகுதியில் இத்துன்புறுத்தல் சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறைக்கும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கும் முறையே பிற்பகல் 2.30 மணிக்கு, 3.15 மணிக்குத் தகவல் கிடைத்தது.
காயமடைந்த சிறுமி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அச்சிறுமி சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பொது இடத்தில் தாய் தமது பிள்ளையைத் தாக்கியதாகக் கடைத்தொகுதியில் கடை வைத்திருக்கும் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
14 வயதுக்கு உட்பட்ட சிறுவரைக் காயப்படுத்திய குற்றத்துக்காக அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிங்கப்பூரில் ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு எதிராக இக்குற்றத்தைப் புரிபவர்களுக்குத் தண்டனை இருமடங்காக உயர்த்தப்பட சட்டத்தில் இடமுள்ளது.


