உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற 33 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 27) நிகழ்ந்தது.
அது தொடர்பாக, மறுநாள் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.
சம்பவத்தன்று பிற்பகல் 3.40 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.
மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அனுப்பப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
இரண்டாம்கட்ட சோதனைக்காக அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணை நடந்துகொண்டு இருந்தபோது அதிகாரியிடம் இருந்த துப்பாக்கியைப் பறிக்க அந்தப் பெண் முயன்றார்.
அந்தச் செயலுக்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வைத்துக்கொள்ள முயன்றதாக அந்தப் பெண் மீது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

