சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 42 வயது பெண், பொதுத்துறை ஊழியரைத் தகாத வார்த்தைகளால் திட்டியது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஜூன் 6ஆம் தேதி மாலை 6.25 மணியளவில் உதவிக்கான அழைப்பு காவல்துறைக்குக் கிடைத்ததை அடுத்து சாங்கி விமான முனையம் ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
இந்தக் கைதைக் காட்டும் காணொளி, சீன ஊடகத்தளமான சியாவ்ஹோங்ஷுவில் ஜூன் 7ஆம் தேதியன்று வலம் வந்தது.
காவல்துறை அதிகாரிகள் மூவர், பெண் ஒருவரை தரையில் அடக்கிக்கொண்டிருந்ததைக் காணொளி காட்டுகிறது.
அத்துடன், பயணப் பெட்டிகளுக்கான சோதனை இடமான அங்கு, பலர் இதனைப் பார்த்துக்கொண்டிருந்ததும் தெரிந்தது.
ஒரு பெண் கூச்சலிட்டுக்கொண்டிருந்ததும் சுற்றியுள்ள வழிப்போக்கர்கள் பார்த்துக்கொண்டிருந்ததும் காணொளியில் பதிவானது.
தொடக்கத்தில் அந்தப் பெண், பயணப் பெட்டிகளை விமானப் பயணத்திற்கு உறுதிசெய்யும் தானியக்க இயந்திரங்களைக் கையால் பலமாகத் தட்டிக்கொண்டிருந்ததாகத் திரு லியூ என்ற இணையவாசி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
விமான நிலைய அதிகாரிகள் அவரை அணுகியதை அடுத்து இச்சம்பவம் நேர்ந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு அந்த அமளி முடிந்ததாகவும் கைவிலங்கு மாட்டப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணைக் காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.

