தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியா உடற்பிடிப்பு நிலையத்துக்கு சேதம் விளைவித்த மாது கைது

2 mins read
6f6aed84-d2c3-430f-8aee-a2ecf0ba9f55
சம்பவ இடத்தில் காவல்துறையினர். - படம்: ஷின் மின்

உடற்பிடிப்பு நிலையத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட மாது ஒருவர் அதனைச் சேதப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தச் சம்பவம் டிசம்பர் 9ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் உள்ள ரேஸ் கோர்ஸ் ரோட்டில் நடந்ததாக ஷின் மின் நாளிதழ் கூறியது.

அந்த நிலையத்துக்குப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நிலையத்தின் முன்புறத்தில் உள்ள கண்ணாடிச் சன்னல்கள் நொறுங்கி விழுந்தன. ஒரு கண்ணாடிக் கதவுச் சட்டமும் சேதமுற்றன.

மேற்கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த காற்றாடிகள் உடைந்ததோடு, கடையின் இருக்கையில் கண்ணாடிகளும் சிதறிக்கிடந்தன.

சம்பவ இடத்தில் கிட்டத்தட்ட ஐந்து காவல்துறை வாகனங்களோடு, பல காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் காணப்பட்டனர்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், பொதுவெளியில் தொல்லை ஏற்படுத்திய சந்தேகத்தின்பேரில் 37 வயது மாது கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.

உடற்பிடிப்பு நிலையத்தின் உரிமையாளரான லின், கடையைத் திறப்பதற்கு $90,000 முதலீடு செய்தார் என்றும் கடை திறந்து மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை என்றும் கூறியதாக ஷின் மின் தெரிவித்தது.

தமது ஊழியர்களுக்கும் தமக்கும் சண்டை ஏற்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் லின் கூறினார்.

அவர்கள் வேலை செய்வதில் ஊக்கம் இழந்ததால், இறுதியில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 4ஆம் தேதியன்று வேலைசெய்வதை நிறுத்திவிட்டதாகக் கூறிய லின், ஏன் ஒருவர் கடையைச் சேதப்படுத்துவார் என்பது தமக்குப் புரியவில்லை என்றும் சொன்னார்.

அருகிலிருந்த கடை ஒன்றின் ஊழியர், டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் பொருள்கள் உடைவதையும் கேட்டதாக ஷின் மின்னிடம் கூறினார்.

நிலையம் சேதமுற்றபோது தாம் அங்கு இல்லை என்றும் அது மூடியிருந்தது என்றும் லின் கூறினார். காவல்துறை தொடர்புகொண்டபோது மட்டுமே தமக்கு நடந்தது பற்றித் தெரியவந்ததாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்