நொவினா பகுதியில் இருக்கும் கடைத்தொகுதி ஒன்றில் உள்ள காப்பிக் கடையில் வாடிக்கையாளர் ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்றதாக லாம் ஹோ லியான் எனும் மாதுமீது ஆகஸ்ட் 30ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
50 வயதான லாம் ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு நொவினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் இருக்கும் ஹான்ஸ் காப்பிக்கடையில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.
உணவகத்தில் உள்ள மேஜையில் இருந்த கத்தியை எடுத்து வாடிக்கையாளரிடம் கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறப்படும் லாமை அதிகாரிகள் கைது செய்ததாகக் காவல்துறையினர் இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
உணவகத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததும் லாம் கத்தியைப் போட்டுவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
விசாரணைகள் மூலமாகவும் காவல்துறையின் கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளைக் கொண்டும் சம்பவம் நடந்த ஒன்பது மணி நேரத்திற்குள் லாமை அதிகாரிகள் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட லாமை மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுத்து வைக்க ஆகஸ்ட் 30ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
அவரது வழக்கு செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.