எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தம்மை அவமானப்படுத்தியதாகப் பெண் ஒருவர் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளார்.
திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை 10.26 மணி அளவில் பேருந்து எண் 145ல் ஏறியதாக ஏஷியாஒன் செய்தித்தளத்திடம் 28 வயது அதிரா கைர்வான் தெரிவித்தார்.
குழந்தைத் தள்ளுவண்டியில் இருந்த தமது குழந்தையுடன் பேருந்தில் ஏறியபோது பேருந்து ஓட்டுநர் பேருந்துக் கதவை மூடியதாக அதிரா கூறினார். இதனால் தமது குழந்தை பீதி அடைந்ததாக அவர் தெரிவித்தார். நல்லவேளையாகக் குழந்தைக்குக் காயம் ஏற்படவில்லை என்றார் அவர்.
பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவுடன் செயல்பட்டது மட்டுமல்லாது, சம்பவத்துக்குப் பிறகு எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்று அதிரா கூறினார்.
இதைப் பற்றி பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் தம்மை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாரான அதிரா கூறினார்.
பேருந்து தோ பாயோ பேருந்து நிலையத்தை அடைந்ததும் பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி நடந்து செல்வதற்கான நடைபாதையிலிருந்து சற்று தூரத்தில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியதாக அதிரா தெரிவித்தார். இதனால் கனமாக இருந்த தமது குழந்தைத் தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்க சிரமமாக இருந்ததாக அவர் கூறினார்.
பேருந்து ஓட்டுநர் இதை வேண்டுமென்றே செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார் அதிரா.
இம்முறையும் அந்த ஓட்டுநர் தம்மிடம் முறையற்ற வகையில் பதிலளித்ததாக அதிரா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நடைபாதைக்கும் பேருந்துக்கும் உள்ள தூரம் குறித்து எடுத்துச் சொல்ல தாம் முயன்றபோது அந்த ஓட்டுநர் அதைச் செவிமடுக்காமல் அங்கிருந்து நடந்து சென்றதாக அவர் கூறினார்.
கோபமடைந்ததை அதிரா ஒப்புக்கொண்டார்.
பேருந்து ஓட்டுநரை நோக்கிக் கத்தியதாக அவர் கூறினார்.
அப்போது அப்பேருந்து ஓட்டுநர் தம்மை வசை பாடியதாக அதிரா தெரிவித்தார்.
முடிந்தால் தமக்கு எதிராகப் புகார் அளிக்கும்படி அதிராவுக்கு அவர் சவால் விட்டதாக அறியப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அதே நாளன்று காவல்துறையிடம் அதிரா புகார் செய்தார்.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகவும் அதிராவுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கிரேஸ் வூ தெரிவித்தார்.

