பேருந்துக்கு அடியில் சிக்கி பெண் உயிரிழப்பு: பேருந்து ஓட்டுநர் கைது

பேருந்துக்கு அடியில் சிக்கி பெண் உயிரிழப்பு: பேருந்து ஓட்டுநர் கைது

படங்கள்: எஸ்ஜிஆர்வி ஃபிரான்ட்மேன்/ஃபேஸ்புக்

07 Oct 2026 - 9:13 am

1 mins read

பூகிஸ் வட்டாரத்திலுள்ள குவீன் ஸ்திரீட் பேருந்து முனையத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். அந்த விபத்து தொடர்பில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) இரவு 7 மணியளவில் அந்த விபத்து தொடர்பான தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் பேருந்து ஒன்றின் அடியில் சிக்கிய நிலையில் காணப்பட்டார். ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி அவர் மீட்கப்பட்டார்.

அந்த இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்ததை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவப் பணியாளர் உறுதிப்படுத்தினார்.

அதேவேளை, கவனக்குறைவாகவும் போதிய எச்சரிக்கையின்றியும் பேருந்தை இயக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 32 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

அந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடருகிறது.

குவீன் ஸ்திரீட் பேருந்து முனையத்திலிருந்து மலேசியாவிற்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விபத்து காரணமாக பேருந்துச் சேவை எண் 170 தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இரவு 9.19 மணிக்குத் தனது ஃபேஸ்புக் பதிவில் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்
விபத்துமரணம்கைது