அழகு சிகிச்சைக்குப் பிறகு ஒரு பெண் மரணம் அடைந்த விவகாரத்தில் அதில் தொடர்புடைய மருத்துவர் அலட்சியமாகச் செயல்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற சிகிச்சையில் சொத்து முகவரான 31 வயது லாவ் லி டிங்குக்கு எத்திலீன்டைஅமினெட்ராஅசிட்டிக் (இடிடிஏ) எனும் ரசாயனத்தை ரத்தக் குழாய் வழியாக சான் பிங்யி செலுத்தினார் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சில அறிகுறிகளுக்கு, குறிப்பாக கன உலோக நச்சுத்தன்மை, கால்சியம் அதிகரிப்பு போன்றவற்றுக்கு மட்டுமே இடிடிஏ பயன்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் அதன் பயன்பாடு குறித்து நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர் மட்டுமே அதனை வழங்க முடியும்.
ஆனால் திருவாட்டி லாவுக்கு அபாயகரமான பொருளை 37 வயது சான் வழங்கியதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
அது, அதிகளவு அடர்த்தியாகவும் அதிவேகத்தில் தரப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
கடந்த 2019 மார்ச் 8ஆம் தேதி பிராஸ் பசா ரோட்டில் உள்ள ரிவைவல் மெடிகல் அண்ட் ஏஸ்தெடிக்ஸ் என்று அழைக்கப்படும் மருந்தகத்தில் சிகிச்சை நடைபெற்றது.
திருவாட்டி லாவுக்கு இதற்கு முன்பு எந்தவித உடல் பாதிப்புகளும் இல்லை. இடிடிஏயின் நச்சுத்தன்மையால் இதயம் செயலிழக்கத் தொடங்கியது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஐந்து நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தார். திருவாட்டி லாவ் முன்நெற்றியில் இருந்த மெல்லிய கோடுகளை மறைப்பதற்காக அழகு சிகிச்சை செய்ய விரும்பினார். அப்போது இடிடிஏ சிகிச்சைக்கு சான் பரிந்துரைத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியான் சன், சான் குற்றவாளி என ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது கவனக்குறைவான செயலால் மரணம் ஏற்பட்டதாகவும் நீதிபதி சொன்னார்.
மார்ச் மாதம் அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தற்போதும் மருத்துவராகச் செயல்படுவதை சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் தரவுகள் காட்டுகின்றன.

