அறுவைச் சிகிச்சை கவனக்குறைவால் மாண்ட பெண்: மருத்துவர்மீது குற்றச்சாட்டு

அறுவைச் சிகிச்சை கவனக்குறைவால் மாண்ட பெண்: மருத்துவர்மீது குற்றச்சாட்டு

படம்: சாவ்பாவ்

12 Mar 2026 - 6:42 pm

2 mins read

அறுவைச் சிகிச்சை ஒன்றைக் கவனக்குறைவாகச் செய்த சிறுநீரக மருத்துவர்மீது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 12) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ராஃபிள்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 54 வயது மருத்துவர் ஃபோங் யான் கிட் மேற்கொண்ட தவறான அறுவைச் சிகிச்சையால் 63 வயது பெண் மாண்டதாகக் கூறப்படுகிறது.

அந்த மருத்துவர், பெண்ணின் சிறுநீரகத்துக்குச் செல்லும் நரம்புக்குப் பதிலாக குடலுக்கும் வயிற்றுக்கும் செல்லும் ரத்த நாளங்களை வெட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

அதன் விளைவாக பெண்ணின் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளுக்கு ரத்தம் செல்லவில்லை. 2022ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி மருத்துவமனையில் பெண் மாண்டார்.

சரியான ரத்த நாளங்கள் வெட்டப்பட்டதா என்பதைச் சரிபார்க்காமல் டாக்டர் ஃபோங் அறுவைச் சிகிச்சையை முடித்துக்கொண்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

சிறுநீரகத்தில் உள்ள கட்டியை அகற்ற பெண் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மரண விசாரணை அதிகாரி கூறினார்.

அறுவைச் சிகிச்சை காரணமாகத்தான் பெண் உயிரிழந்தார் என்று அரசாங்க மரண விசாரணை அதிகாரி எடம் நக்கோடா சொன்னார்.

அறுவைச் சிகிச்சையின்போது தவறு நடந்துவிட்டதை உணர்ந்த டாக்டர் ஃபோங், கிட்டத்தட்ட 13 நிமிடங்களுக்கு அறுவைச் சிகிச்சையை நிறுத்திவிட்டு உதவிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தின் நிபுணர் அறிக்கை முன்வைத்தது.

டாக்டர் ஃபோங்கின் வழக்கு விசாரணை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கவனக்குறைவால் மரணம் விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
அறுவை சிகிச்சைமருத்துவர்குற்றச்சாட்டு