ஒரு நோயாளியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் தவறான அறுவை சிகிச்சை வழக்கில் தொடர்புள்ள மருத்துவர் மீது சிங்கப்பூர் மருத்துவ மன்றம் (எம்ஐசி) முறைப்படியான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மார்ச் 17ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த விளக்கத்தில் சுயேச்சை ஒழுங்குமுறை விசாரணைக் குழு, விசாரணையை நடத்தும் என்று அம்மன்றம் கூறியது.
இது குறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதால் மேல் விவரம் அளிக்க அது மறுத்துவிட்டது.
மார்ச் 12ஆம் தேதி சிறுநீரகவியல் மருத்துவர் ஃபோங் யான் கிட்மீது அறுவை சிகிச்சையின்போது 63 வயது மாதுக்கு மரணம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த 54 வயது நபர், நோக்கமில்லா மரணம் விளைவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவரங்களை சரி பார்த்ததில் ராஃபிள்ஸ் மருத்துவமனை இணையப் பக்கத்தில் அவரது பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2025 நவம்பர் மாதம் மரண விசாரணை நடத்தப்பட்டபோது மருத்துவர் ஃபோங் அறுவைசிகிச்சையின்போது நடந்தது குறித்து அவர் பொய்யான விவரங்களை கூறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மாது 2022 ஏப்ரலில் சிறுநீரில் ரத்தம் வருவதாகக் கூறி மருத்துவமனை சிகிச்சைக்கு வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பிறகு சில வாரங்களில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சையில் அவர் மரணமடைந்தார். மாதின் ரத்த நாளங்கள் தவறுதலாக துண்டிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

