தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்பிஎஸ் பேருந்து, கார் மோதிய விபத்தில் பெண் ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்ப்பு

2 mins read
c9939160-90fc-43a8-bbd7-6ac7d97bbf69
காரின் 34 வயது பெண் ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்தார். - படம்: சிங்கப்பூர்ரோட்ஸ்ஆக்சிடெண்ட்.காம்/ ஃபேஸ்புக்

எஸ்பிஎஸ் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) புக்கிட் தீமா, டியூக்ஸ் சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது.

பிற்பகல் 12.55 மணியளவில் அந்த விபத்து குறித்து தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

விபத்தில் பாதிக்கப்பட்ட 34 வயது பெண் ஓட்டுநர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

46 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாக காவல்துறை தெரிவித்தது.

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் பேச்சாளரான கிரேஸ் வூ, புக்கிட் தீமா சாலையில் கடைசி இடதுப்பக்கத் தடத்தில் பேருந்து எண் 157 பயணம் செய்து கொண்டிருந்ததாகவும் அந்தத் தடத்தில் வலதுப்புறத்திலிருந்து திடீரென கார் நுழைந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநர் உட்பட அதில் பயணம் செய்த பயணிகள் யாரும் விபத்தில் காயம் அடையவில்லை என்றார் அவர்.

சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடெண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில், நீல நிற கார் ஒன்று நடைபாதையில் உள்ள தடுப்புமீது மோதி நின்றதைக் காண முடிந்தது.

காரின் பின்பக்கம் நசுங்கியிருந்தது. அதன் பின்னால் சில மீட்டர் தொலைவில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்து முன்பக்கத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்திருந்தது.

மேற்கூரை போடப்பட்ட பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த சிலர் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு உதவி செய்ததையும் காணொளி காட்டியது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்ஸ் வாகனம் அருகில் நின்றுகொண்டிருந்தது.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்