தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் கணவரிடம் ஜீவனாம்சம்: பெண்ணின் கோரிக்கை ஏற்க மறுப்பு

2 mins read
இரு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கோரப்படும் தொகை நியாயமற்றது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு
58a39df8-9632-410b-9541-a8b48ba3ab29
ஏற்கெனவே அந்த ஆடவர் அவரின் இரண்டு மகன்களின் பராமரிப்புக்காக அந்த மாதிடம் $4,000 வழங்கி வந்துள்ளார். அது போதாது, பிள்ளைகளைப் பராமரிக்க அதிக தொகை வேண்டும் என்று அந்த மாது முறையீடு செய்திருந்தார். - படம்: சாவ்பாவ்

முன்னாள் கணவர் மாதம் $30,000க்கும் மேல் ஜீவனாம்சமாகத் தரவேண்டும் என்று ஒரு மாது நீதிமன்றத்தை நாடினார். அந்தக் கோரிக்கை அளவுக்கு அதிகமானது என்று நீதிமன்றம் ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பளித்து வழக்கை நிராகரித்தது.

ஏற்கெனவே அந்த ஆடவர் இரண்டு மகன்களின் பராமரிப்புக்காக அந்த மாதிடம் மாதம் $4,000 வழங்கி வந்துள்ளார். அது போதாது, பிள்ளைகளைப் பராமரிக்க அதிக தொகை வேண்டும் என்று அந்த மாது முறையீடு செய்திருந்தார்.

அந்த ஆடவர் ஒரு செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கநிலைப் பள்ளியில் உள்ள அந்த 10 வயதும் 12 வயதுமான இரு மகன்களுக்கு முறையே மாதம் $16,800 மற்றும், $15,000 தொகையை மாது கோரியிருந்தார். இளம் வயதினரான அந்தப் பிள்ளைகளுக்கு இந்த அளவு பராமரிப்புத் தொகைக்கான அடிப்படை தேவையே இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

“செல்வந்தர்களான பெற்றோர் அவர்களது பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுப் பொருள்களை வாங்கித் தருவது, சுவைமிக்க உயர்தர உணவகங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற தேவையற்ற பழக்கங்களை அவரவரின் சொந்த விருப்பத்தின்பேரில் செய்து கொள்ளலாம்” என்று உயர்நீதிமன்ற நீதிபதி சூ ஹன் டெக் கூறினார்.

பெற்றோருக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்படும்போது, நீதிமன்றங்கள் குழந்தைகளின் பராமரிப்புக்குத் தேவையானதை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. பெற்றோரின் ஆசைகளையோ, குழந்தைகளின் விருப்பங்களையோ நிறைவேற்றுவதை நீதிமன்றங்கள் முடிவு செய்வதில்லை.

இந்த வழக்கில் 40 வயதைக் கடந்துள்ள தம்பதிகள் மூன்றே ஆண்டு மணவாழ்வுக்குப் பிறகு, 2015ல் விவாகரத்தானவர்கள். ஆடவர் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநராகவும் மாது வழக்கறிஞராகவும் முன்பு பணியாற்றியவர்கள் என்று அறியப்படுகிறது.

ஆடவர் இளம் வயதில் தந்தையின் சொத்துகளின் வாரிசானார். அவரது தாயார் மறைந்தபோது, அவரும் ஒரு சகோதரியும் அறக்கட்டளை ஒன்றின் $50 மில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துகளுக்கும் பணத்துக்கும் இணை உரிமையைப் பெற்றனர்.

இருப்பினும் தாயார் அவர்களின் சொத்தை அவர் மறைந்து 25ஆம் ஆண்டில்தான் முழுமையாக விற்று பயன்பெற முடியும் என்று உயில் எழுதிச் சென்றார். அதுவரை இருவரும் மாதம் $10,000 வரை சொத்திலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதியுள்ளது.

அந்த விவரங்களின் ஆவணங்களைக் கொண்டுதான் பிள்ளைகளின் பராமரிப்புக்கு ஆடவரால் தான் கேட்கும் தொகையை வழங்க முடியும் என்று மாது வாதிட்டார்.

பெற்றோரிடம் என்ன உள்ளது என்பதைவிட பிள்ளைகளின் பராமரிப்புக்கு என்ன தேவை என்பதையே இவ்வித வழக்குகளில் நீதிமன்றங்கள் முடிவுசெய்கின்றன. அந்த வகையில் மூத்த மகன் மனநலப் பிரச்சினை உள்ளவர் என்பதால் அவரின் வருடாந்திர சிறப்புப் பராமரிப்புக்கு மட்டுமான பாதி தொகையை ஆடவர் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்