தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணத்தைப் பறிகொடுத்ததாகப் பொய் கூறிய மாதிற்கு அபராதம்

1 mins read
72154a4d-0be3-4b50-a3d6-9f0f91762526
ஈசூன் புளோக் எண் 504சிக்கு அருகே புகைப்பிடித்து கொண்டிருக்கும்போது இரண்டு திருடர்கள் தன்னிடமிருந்து பணத்தைத் திருடிவிட்டதாக டான் காவல்துபுகார் அளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறையினரிடம் பொய்ப் புகார் அளித்த குற்றத்திற்காக 35 வயது ஜாய்ஸ் டான் ஹ்வீ லெங்கிற்கு வியாழக்கிழமை $2000 அபராதம் விதிக்கப்பட்டது.

தன்னிடம் இருந்து $6,700 பணத்தை இருவர் திருடிவிட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறை அதிகாரிகளுக்குத் தவறான தகவல் அளித்ததாக சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

வேலையிடத்தில் சக ஊழியர் ஒருவருடன் நல்லுறவைத் தக்கவைத்துக்கொள்ள நினைத்தார் டான்.

அதனால், இந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அந்த ஆடவர் தன்னிடம் கடனாகக் கேட்ட $6,700 பணத்தைத் தர ஒப்புக்கொண்டார்.

உண்மையில் அவ்வாறு பணம் தருவதில் டானுக்கு விருப்பமில்லை.

மார்ச் 16ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் அந்த ஆடவரைக் கைத்தொலைபேசியில் அழைத்த டான், பணத்தைத் தனது வீட்டிற்கு அருகில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.

ஆடவரோ அடுத்த நாள் பணத்தை வேலையிடத்தில் பெற்றுக்கொள்வதாகக் கூறினார்.

அன்றிரவு 10.20 மணியளவில் காவல்துறையை அழைத்த டான், ஈசூன் ஸ்திரீட் 51இன் புளோக் 504சிக்கு அருகே புகைப்பிடித்தபோது ஆடவர் இருவர் தன்னிடமிருந்து பணத்தைத் திருடிவிட்டதாகப் புகார் அளித்தார்.

கத்தி முனையில் அவர்கள் திருடியதாகவும் கூறியிருந்தார்.

காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தான் பொய்யுரைத்ததை டான் ஒப்புக்கொண்டார்.

வேலையிட நண்பருக்குப் பணம்தர விருப்பமில்லாததால் அவ்வாறு நடந்துகொண்டதாக அவர் காவல்துறையிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்