முதியவரிடம் $5,000 மதிப்புள்ள தங்கச் சங்கிலித் திருட்டு: 63 வயது மாதுக்கு அபராதம்

முதியவரிடம் $5,000 மதிப்புள்ள தங்கச் சங்கிலித் திருட்டு: 63 வயது மாதுக்கு அபராதம்

1 mins read
e8bbce33-0896-491f-b5ae-52f2b3df4d3d
தன்மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றத்தை 63 வயது சென் ரோங்குவா நீதிமன்றத்தில் ஒப்புகொண்டார். - படம்: பிக்சாபே

கேலாங்கில் இருக்கும் ஹோட்டல் ஒன்றின் அறையில் குளித்துகொண்டிருந்த 76 வயது முதியவரிடமிருந்து S$5,000 (US$3,785) பெறுமானமுள்ள தங்கச் சங்கிலியைத் திருடிய மாதுக்கு வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 15) S$5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தன்மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றத்தை 63 வயது சென் ரோங்குவா நீதிமன்றத்தில் ஒப்புகொண்டார்.

சென், ஆகஸ்ட் 1ஆம் தேதி ஹாங்காங் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட முதியவரை கேலாங் அருகே ஜூலை 31ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அவர் சந்தித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த முதியவருக்கு உடல்பிடிப்புச் செய்ய சென் ஒப்புகொண்டு, அதற்காக ஹோட்டல் அறை ஒன்றிற்கு இருவரும் சென்றதாகவும் கூறப்பட்டது.

குளிக்க செல்வதற்கு முன்பு அந்த முதியவர் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை தன்னுடைய பையில் வைத்துவிட்டுச் சென்றதாகச் சொல்லப்பட்டது.

அந்தத் தங்கச் சங்கிலியை எடுத்துகொண்டு சென் ஹோட்டல் அறையைவிட்டு தான் தங்கியிருந்த கேலாங், லோராங் 22யை நோக்கி விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தங்கச் சங்கிலி காணாமல் போனது குறித்துக் காவல்துறையிடம் அந்த முதியவர் புகார் அளித்தார்.

காவல்துறை ஜூலை 31ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு சென்னைக் கைது செய்து அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை மீட்டுப் பாதிக்கப்பட்ட முதியவரிடம் ஒப்படைத்தது.

குறிப்புச் சொற்கள்