வளர்ப்புத் தந்தையை வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு 18 ஆண்டு சிறை

12 mins read
22f00f0f-ca3a-45c3-98af-13b3c66b688a
கொலை செய்ய நோக்கமில்லாது மரணம் விளைவித்ததாக டான் சியூ யான் மீது குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வளர்ப்புத் தந்தையை வெட்டிக் கொன்ற 31 பெண்ணுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது முதலில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு கொலைக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது.

கொலை செய்ய நோக்கமில்லாது மரணம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றத்தை டான் சியூ யான் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

புற்றுநோய் காரணமாகத் தமது வளர்ப்புத் தாயார் உயிரிழந்த பிறகு, தமது வளர்ப்புத் தந்தை தம்மை வீட்டிலிருந்து விரட்டியடித்து விடுவார் என்று டான் அச்சம் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

டானின் குடும்பம் செங்காங்கில் உள்ள தங்களது வீட்டில் வசித்தனர்.

டான் குழந்தையாக இருந்தபோது 1992ஆம் ஆண்டில் திரு டான் ஆ பாங்கும் அவரது மனைவியான திருவாட்டி கோ லீ ஹுவாவும் அவரைத் தத்தெடுத்தனர்.

2019ஆம் ஆண்டில் திருவாட்டி கோவுக்குப் புற்றநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டில் டானுக்கும் பங்கு உண்டு என்று அவர் தமது மகளுக்கு வாக்களித்தார்.

கூட்டுச் சொத்துரிமை முறைப்படி அந்த வீட்டின் உரிமையாளராக டானின் பெற்றோர் இருந்தனர். எனவே, திருவாட்டி கோ இறந்ததை அடுத்து, அந்த வீட்டில் ஏக உரிமையாளரானார் திரு டான்.

திருவாட்டி கோ, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று உயிர் நீத்தார்.

இறுதிச் சடங்கின்போது தந்தைக்கும் மகளுக்கும் இடையே வீடு மற்றும் மற்ற சொத்துகள் தொடர்பாகப் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டது.

கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறும்படி 67 வயது திரு டான் தமது மகளிடம் கூறியதாகவும் அதன் பிறகு சொத்தை அவரது பெயருக்கு மாற்ற இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், தமது தந்தை வாக்கு தவறினால் தமக்கு வசிப்பிடம் இல்லாமல் போய்விடும் எனப் பயந்து பேரங்காடிக்குச் சென்று அங்கிருந்த ஆகப் பெரிய கத்தியை டான் வாங்கினார்.

தமது தந்தை வீட்டின் ஏக உரிமையாளரா கிவிட்டார் என 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் டானுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அவர் பதற்றமடைந்தார்.

வீட்டின் உரிமையாளராகத் தமது பெயரையும் சேர்த்துக்கொள்ளும்படி 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று தமது தந்தையிடம் டான் கேட்டுக்கொண்டார். இருவருக்கும் இடையே மிகக் கடுமையான வாக்குவாதம் மூண்டது.

வீட்டை டானுக்கு விட்டுச் செல்வதற்குப் பதிலாக அதை நன்கொடையாக அளிக்க இருப்பதாக தமது மகளிடம் திரு டான் கூறினார்.

மறுநாள், தமது மகளின் பணிச் சீருடையைத் திரு டான் துவைத்துக்கொண்டிருந்தார் திரு டான். அப்போது அவரை அணுகிய டான், வீட்டைச் சரிசமமாகப் பகிர்ந்துகொள்வது குறித்து கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதைப் பற்றி இனி பேச வேண்டாம் என்று திரு டான் பதிலளித்தார். இதையடுத்து, தமது வளர்ப்புத் தந்தையைக் கொலை செய்ய டான் முடிவெடுத்தார்.

இரவு உணவுக்குப் பிறகு திரு டான் குளிக்கச் சென்றார். அப்போது தமது அறையில் வைத்திருந்த கத்தியை டான் எடுத்து அவருக்காகக் காத்திருந்தார்.

குளியலறையைத் திரு டான் திறந்ததும் அவரை டான் தொடர்ச்சியாகப் பலமுறை வெட்டிச் சாய்த்தார்.

திரு டான் தரையில் சுயநினைவின்றி கிடந்தபோதும் டான் தரையில் அமர்ந்து அவரைத் தொடர்ந்து கத்தியால் வெட்டினார். களைப்படைந்த பிறகே வெட்டுவதை நிறுத்தினார். தாக்குதல் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் நீடித்தது என டான் கூறியதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பிறகு, கழிவறைக்குச் சென்று தம்மைச் சுத்தம் செய்துகொண்டார் டான். பிறகு பாடல்களைக் கேட்டு, குடும்பத்தின் பழைய புகைப்படங்களைப் பார்த்தார்.

அதிகாலை 5.30 மணி அளவில் காவல்துறையினரை அழைத்தார்.

குறிப்புச் சொற்கள்