மோசடிக்காரருக்கு வங்கி விவரங்களை அளித்து மாதம் $5,000 பெற்ற மாதுக்குச் சிறை

2 mins read
76b3d370-a2a2-412a-9480-f18a23f29f51
சித்தி அமினா ரஷித். - படம்: ஊடகம்

தனது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றவர்களுக்கு வழங்கி அதன்மூலம் மாதத்திற்கு $5,000 சம்பளம் பெற்ற 29 வயது சித்தி அமினா ரஷித்துக்குச் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 9) ஐந்து மாதங்கள் இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவரின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட $139,000க்கும் அதிகமான பணம் செலுத்தப்பட்டதாகவும் அதில் $33,750 காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட மூன்று மோசடி சம்பவங்களில் தொடர்புடையது எனவும் அரசுத் தரப்பு கூறியது.

அந்த மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 70 வயது முதியவரும் அடங்குவார். அவரது விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

இவ்வாண்டு மார்ச் மாதம் தனக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர், வங்கிக் கணக்கு விவரங்களை அளித்தால் மாதத்திற்கு $5,000 சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகச் சித்தி நீதிமன்றத்தில் கூறினார்.

தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தைக் கொண்டு இணையத்தில் ‘கிரிப்டோ’ மின்னிலக்க நாணயத்தை வாங்க அந்த நபர் தன்னை அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 13ஆம் தேதி, 57 வயது மாது ஒருவர் தான் காதல் மோசடியால் பாதிக்கப்பட்டதாகக் காவல்துறையில் புகார் அளித்தார்.

மோசடிக்காரர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு $5,000 செலுத்தக் கூறியதாகவும் தானும் அப்பணத்தைச் செலுத்தியதாகவும் அந்த மாது தனது புகாரில் குறிப்பிட்டார்.

காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அது சித்தியின் வங்கிக் கணக்கு எனத் தெரியவந்தது.

அதை அதிகாரிகள் முடக்கும்போது அந்தக் கணக்கில் $78,000க்கும் திகமான பணம் இருந்ததாகக் கூறப்பட்டது.

சித்தியின் கணக்கில் பணம் எடுக்க முடியாததால் அந்த அறிமுகமில்லாத நபர் சித்தியைப் பணம் செலுத்த வேறு கணக்கை வழங்கும்படி கூறினார்.

சித்தியின் மற்றொரு கணக்கில் அந்த நபர் $20,000 செலுத்தினார். அதனை வைத்தும் ‘கிரிப்டோ’ மின்னிலக்க நாணயங்களை அவர் வாங்கினார்.

ஏப்ரல் 11ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட சித்தி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்