ஜூரோங்கில் விபத்தை ஏற்படுத்திய பிறகு தப்பியோடிய ஓட்டுநர் மறுநாள் கைது செய்யப்பட்டார்.
அவர், ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) அன்று 36 வயதுப் பெண் பாதசாரி மற்றும் ஒரு கார் தொடர்பான விபத்து, ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 4ல் நிகழ்ந்தது.
காலை 7.25 மணிக்கு சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் வந்தபோது அங்கு விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் காணப்படவில்லை.
விபத்தில் சிக்கிய பெண், சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அங்கு அவர் உயிரிழந்ததாகக் காவல்துறை கூறியது.
விபத்தில் காயமடைந்தவருக்கு பலரும் உதவிகள் செய்து புல்தரையில் படுக்க வைத்தனர். தப்பியோடிய ஓட்டுநரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மறுநாள் சனிக்கிழமை (ஜனவரி 24) அவர் கைது செய்யப்பட்டார்.

