செம்பவாங்கில் ஜூலை 23ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் காயமடைந்த 35 வயது மியன்மார் மாது சிகிச்சைக்காக மியன்மார் திரும்பியுள்ளார்.
சிங்கப்பூரில் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்க முடியாததால், அவர் தாயகம் திரும்பினார்.
ஷின்மின் டெய்லி நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தான் ஜூலை 20ஆம் தேதி வேலையிலிருந்து விலகிவிட்டதாகக் கூறிய அந்த மாது, அறுவை சிகிச்சைக்குக் கட்டணம் செலுத்தத் தன்னிடம் சேமிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, ஜூலை 24ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், காயமடைந்த அந்த மாது ஓர் இல்லப் பணிப்பெண் என்று ஷின்மின் டெய்லி தெரிவித்திருந்தது.
பொறியாளரான அந்த மாது இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வேலைக்காகச் சிங்கப்பூர் வந்திருந்ததாக அந்த நாளிதழ் கூறியது.
வெலிங்டன் வட்டாரத்தில் உள்ள புளோக் 508ஏக்கு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டதாக அந்த மாது ஷின் மின் டெய்லி நாளிதழிடம் கூறினார்.
“அந்தக் கார் நகராது என்று நினைத்து நான் சாலையைக் கடந்தேன். ஆனால், நான் கடக்கும்போது, கார் திடீரெனத் திரும்பி எனது வலது பாதத்தின்மீது ஏறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் விவரித்தார்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் நீரழுத்த மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி அவரது காலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து, அவர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தனது வலது பாதத்தில் இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த மாது கூறினார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு $40,000 முன்பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அவரால் அதனைச் செலுத்தமுடியவில்லை.
“என்னால் எனது முன்னாள் முதலாளியிடம் மட்டுமே உதவி கேட்க முடிந்தது. அவர் கனிவோடு எனது மருத்துவச் செலவுகளுக்கான பணத்தைக் கடனாகக் கொடுத்ததோடு, மியான்மார் திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டையும் வாங்கிக் கொடுத்தார்,” என்றார் அந்த மாது.
39 வயது ஆண் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

