பதின்ம வயதுப் பெண்ணைத் தாக்கி அவரின் மூக்கை உடைத்த மாதுக்கு செவ்வாய்க்கிழமை மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த 20 வயது மாது தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஜூன் மாதம் ஒத்துக்கொண்டார்.
அந்த மாதின் பெயர், வீடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் அடையாளக் காப்பு உத்தரவு காரணமாக வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி காலை 9.20 மணியளவில் நடந்தது எனவும் அந்த மாதுக்கும் சக குடியிருப்பாளரான 17 வயதுப் பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்தது எனவும் கூறப்பட்டது.
அந்த மாது, மற்ற இரு குடியிருப்பாளர்கள் முன்பாக அந்தப் பதின்ம வயதுப் பெண்ணைத் திடீரெனத் தலையில் பலமுறை தாக்கினார், எட்டி உதைத்தார் என்றும் சொல்லப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் தன் முகத்தைக் கைகளைக் கொண்டு மறைத்துத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றார் எனவும் அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரின் தலையை அந்த மாது தரையில் முட்டினார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சக குடியிருப்பாளர்கள் அந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்றும் முடியாததால் மற்றவர்களை உதவிக்கு அழைத்தனர். அனைவரும் இணைந்து அந்த மாதை இழுத்து, அறையைவிட்டு வெளியே அனுப்பினர்.
பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூக்கில் ஏற்பட்ட எலும்புமுறிவிற்கும் உச்சந்தலையில் ஏற்பட்ட வீக்கத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்துக் காவல்துறையிடம் ஜனவரி 25ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தாக்குதலில் ஈடுபடுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.