மாணவர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ஆசிரியை ஒருவர், இணையத்தில் சந்தித்த ஆடவரிடம் பாலியல் குறுந்தகவல்களை பகிர்ந்துகொண்டு பின்னர் மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினார்.
சவன்னா கோ, பாதிக்கப்பட்ட 23 வயது முழுநேர தேசிய சேவையாளரிடம் தனது உறவினர் சிங்கப்பூர் காவல் துறையில் பணியாற்றுவதாகவும் 700 வெள்ளி பணம் தர மறுத்தால் தமக்கு வந்த பாலியல் செய்திகளை தெரிவிக்கப்போவதாகவும் கூறினார்.
பயத்தின் காரணமாக அந்த ஆடவர் பணம் தர ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட உறவினர் யாரும் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சவன்னாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரைணையின்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞரான சியான் டே, அச்சுறுத்தலுக்கு பணியக்கூடிய, ஏமாற்றுவதற்கு எளிதான நபரை அடையாளம் கண்டதும் குற்றம்சாட்டப்பட்ட பெண் அவரை ஏமாற்ற முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில் அந்த ஆடவர் சவன்னா கோவுக்குத் தெரியவந்ததாகவும் தான் ஒரு பாலர் பள்ளி ஆசிரியை என்று தம்மை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் வழக்கறிஞர் குறிபிட்டார்.