145,000 வெள்ளி கையாடல் செய்த பெண்ணுக்குச் சிறை

1 mins read
a7d6406c-d900-4a83-ae57-f95d3ba36bb5
ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாகக் குற்றச் செயலில் ஈடுபட்ட 30 வயது லா ஜியா மின்னுக்கு 20 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல் சிகிச்சை நிலையத்தில் அலுவலக நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்த பெண் ஒருவர் கிட்டத்தட்ட 145,000 வெள்ளி ரொக்கத்தைக் கையாடல் செய்துள்ளார்.

ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாகக் குற்றச் செயலில் ஈடுபட்ட 30 வயது லா ஜியா மின்னுக்கு 20 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கையாடல் செய்த ரொக்கத்தில் 4,600 வெள்ளியை ஜியா திருப்பிக் கொடுத்துவிட்டார்.

திருடிய பணத்தைக் கொண்டு ஜியா தனது கடன்களை அடைத்துள்ளார். பின்னர் அவர் விலை உயர்ந்த பொருள்களை வாங்கியும் வீட்டுக்குத் தேவையான செலவுகளையும் செய்துள்ளார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜியா ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) தண்டனை விதிக்கப்பட்டது.

அலுவலக நிர்வாக அதிகாரியாக ஜியா பணி புரிந்தபோது காசாளராகவும் அவ்வப்போது பணிபுரிந்தார். நோயாளிகள் சிகிச்சைக்காக வழங்கும் பணத்தை அவர் கையாடல் செய்தார்.

2022 அக்டோபர் முதல் 2023 ஆகஸ்ட் வரை பணத்தை ஜியா கையாடல் செய்தார்.

2023ஆம் ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களில் சரியான கணக்கு இல்லாததால் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. அப்போது ஜியாவின் திருட்டுச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியா கைது செய்யப்பட்டார். 2025ஆம் ஆண்டு அவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தற்போது அந்தப் பெண் 15,000 வெள்ளி பிணையில் உள்ளார். அவர் அடுத்த மாதம் 24ஆம் தேதி சிறைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்