தேவாலயத்திற்குக் காரில் சென்றபோது மாது ஒருவர் பாதசாரியை மோதித் தள்ளி, அவரது கால்மீது வாகனத்தை ஏற்றினார்.
அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிறப்புத் தேவையுடைய 46 வயது பெண். அவரது முழங்கை, முட்டி, முகம் ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு 339 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
கவனக்குறைவாகச் செயல்பட்டு கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட மோனிக்கா காரா டியூ லாய் யீக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) ஏழு நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு $19,594.03 இழப்பீடு வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அப்பர் தாம்சன் சாலையில் உள்ள ‘சர்ச் அஃப் தி ஹோலி ஸ்பிரிட்’ தேவாலயத்திற்கு டியூ வாகனத்தை ஓட்டிச்சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.
சாலைச் சந்திப்பை அணுகியபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் கவனிக்கத் தவறினார். கார் மோதியதால் அப்பெண் கீழே விழுந்தார்.
அதற்குப் பிறகும் டியூவின் கார் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதால் காரின் சக்கரம் அப்பெண்ணின் இடது கால்மீது ஏறியது.
காரை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவச் சென்றபோது, அந்தப் பெண்ணின் கால் காருக்கு அடியில் சிக்கியிருப்பதை உணர்ந்தார் டியூ.
தொடர்புடைய செய்திகள்
மறுபடியும் வெளியேறுவதற்கு முன்னர், அவர் மீண்டும் காரை முன்னோக்கிச் செலுத்தினார். பாதிக்கப்பட்டவருக்கு வாயைச் சுற்றிலும் இரத்தமாக இருந்தது. அவரது காலில் காயங்களும் வீக்கமும் ஏற்பட்டிருந்தன.
மனிதர்கள் அதிகம் நடக்கும் இடத்தில் டியூ அதிக வேகத்தில் சென்றதாக அரசுத் தரப்பு வாதாடியது.
டியூ இதற்கு முன்னரும் பலமுறை வேகமாக வாகனத்தை ஓட்டியதற்கான குற்றங்களைப் புரிந்திருந்தார். 2016ஆம் ஆண்டில் அவர் சிவப்பு விளக்கையும் தாண்டிச் சென்றார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நடக்கும்போது தொடர்ந்து இடது முட்டியில் வலி இருப்பதாகக் கூறப்பட்டது. அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக $19,500க்கும் மேல் செலவானது.