மதுபோதையில் டாக்சி ஓட்டுநரை அறைந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை

மதுபோதையில் டாக்சி ஓட்டுநரை அறைந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை

2 mins read
20c8e9d2-7de7-4d06-91b6-c4c74fab243d
டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய குற்றத்தை 36 வயது ஷாலினி தேவராஜன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மதுபோதையில் 73 வயது டாக்சி ஓட்டுநரை அறைந்த பெண்ணுக்கு வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 19) இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

$24 டாக்சிக் கட்டணத்தைச் செலுத்த தம்மிடம் ரொக்கமோ மின்னிலக்கப் பணப்பரிமாற்ற வசதியோ இல்லை என்று கூறி, அப்பெண் ஓட்டுநரை எவ்விதத் தூண்டுதலும் இன்றித் தாக்கினார்.

அந்த முதியவரைத் தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, 36 வயது ஷாலினி தேவராஜனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என்று அரசாங்க வழக்கறிஞர் அடீல் டாய் தெரிவித்தார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 2025ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று பிற்பகல் 3 மணியளவில் டாக்சியில் ஏறியபோது ஷாலினி மதுபோதையில் இருந்தார்.

பயணத்தின்போது அவர் தூங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஈசூன் ஸ்திரீட் 22ல் உள்ள அவரது இடத்தைச் சென்றடைந்ததும், ஓட்டுநர் அவரை எழுப்பி $24 கட்டணம் செலுத்தும்படிக் கூறினார்.

தம்மிடம் பணம் இல்லை என்றும் பணத்தை எடுத்து வர தமது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் ஷாலினி ஓட்டுநரிடம் கூறினார்.

“ஓட்டுநர் ஷாலினியிடம் அவரது கைப்பேசியை டாக்சியில் வைத்துவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

“ஆனால், ஷாலினி அதற்கு மறுப்புடத் தெரிவித்தார்.

“பின்னர் பணத்தைப் பெற அவருடன் வீட்டிற்கு வருவதாக ஓட்டுநர் கூறியதையும் அவர் ஏற்கவில்லை,” என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதன்பின்னர், தம்மைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஷாலினி டாக்சி ஓட்டுநரிடம் சவால் விடுத்துள்ளார்.

ஈசூன் அக்கம்பக்கக் காவல் நிலையத்திற்குச் செல்லும் வழியெங்கும் அவர் ஓட்டுநரைத் திட்டியதோடு, ஓட்டுநரையும் அவரது வாகனத்தையும் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்பட்டது.

ஆனால், டாக்சி ஓட்டுநர் எதற்கும் பதிலளிக்காமல் அமைதியாக வாகனத்தைச் செலுத்தினார்.

மாலை 4.20 மணியளவில் இருவரும் காவல் நிலையத்திற்கு அருகில் டாக்சியைவிட்டு இறங்கியபோது, ஷாலினி ஓட்டுநரின் இடது கன்னத்தில் பலமாக அறைந்தார்.

பின்னர் அவர் காவல் நிலையத்திற்குள் நுழைய, அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் ஓட்டுநருக்கு உதவினார்.

ஷாலினி கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட ஓட்டுநர், கூ டெக் புவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, அவருக்கு ஒரு நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மதுபோதைடாக்சிஓட்டுநர்தாக்குதல்சிறைத்தண்டனை