மறுவாழ்வுப் பயிற்சியை தவிர்த்த ‘கேபாட்’ வைத்திருந்த மாதுக்குச் சிறை

2 mins read
19d0c107-fa6f-4d55-aa50-38d25bdf12a7
சிங்கப்பூர் நீதிமன்றம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டான ‘கேபாட்’ சாதனத்தை வைத்திருந்த குற்றத்துக்குப் பெண் ஒருவருக்கு மறுவாழ்வுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

டான் யூ லிங் என்ற அந்த 23 வயது மாது, அப்பயிற்சியில் கலந்துகொள்வதைத் தவிர்த்த குற்றத்துக்காக அவருக்கு ஒரு வார சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) விதிக்கப்பட்டது என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையத்தால் இவ்வகை குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் பெண்ணும் இவராவார்.

அந்த மாது கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ‘எட்டோமிடெட்’ என்ற போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுடன் பிடிபட்டார்.

நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படுவதற்குப் பதிலாக அவருக்கு அபராதமும் மறுவாழ்வுப் பயிற்சியும் தண்டனையாக விதிக்கப்பட்டன. செப்டம்பர் 24ஆம் தேதி நடத்தப்பட்ட அவரது முதல் மறுவாழ்வுப் பயிற்சிக்கு அவர் வரவில்லை என்று ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மறுவாழ்வுப் பயிற்சியில் கலந்துகொள்வதற்கான நினைவூட்டுகள் பலமுறை கொடுக்கப்பட்டும் அவர் அதில் பங்கேற்கவில்லை. எனவே ஆணையம் அவர்மீது போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது.

போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான நிபுணத்துவ ஆதரவு வழங்கும் மறுவாழ்வுப் பயிற்சியை ஆணையம் வழங்குகிறது. அதில் முதல்முறை குற்றவாளிகள் கட்டாயமாகக் கலந்துகொள்ளவேண்டும்.

மறுவாழ்வு பயிற்சிகளைத் தவிர்ப்போர், அல்லது முழுமையாக முடிக்காதவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர்.

‘எட்டோமிடெட்’ போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் வைத்திருப்போருக்கு $10,000 அபராதம், இரண்டு ஆண்டு சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்