மலேசியாவிற்கு ஒருநாள் சுற்றுலா சென்ற பெண்மணி, தமது ஆண்ட்ராய்டு கைப்பேசியில் நிறுவப்பட்ட நச்சுநிரலால் $110,960 பணத்தைப் பறிகொடுத்துவிட்டார்.
ஃபேஸ்புக்கில் ‘ஜிடி டிராவல்ஸ் & டூர்ஸ்’ என்ற பயண நிறுவனம், ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ‘மலேசியாவின் கூலாய்க்கு $28 டுரியான் பகல்நேரச் சுற்றுப்பயணம்’ என்னும் விளம்பரத்தை நம்பி திருவாட்டி லை, 54, என்ற அப்பெண்மணி அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அந்நிறுவனம் திருவாட்டி லைக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியது. சுற்றுலா குறித்த சலுகைகளை அறிய அவரது கைப்பேசியில் ‘இஜி ஸ்டோர்’ என்ற மூன்றாம் தரப்புச் செயலியைப் பதிவிறக்குமாறு அது அறிவுறுத்தியது.
அதன்படி அவரும் அந்தச் செயலியைப் பதிவிறக்கினார். ஆனால், திருவாட்டி லையும் அவருடைய நண்பர்களும் சுற்றுலா செல்ல விரும்பாததால் அவர்கள் அந்தச்சீட்டை வாங்கவில்லை.
வங்கி விவரங்களையோ அவரது முகவரியையோ அந்நிறுவனத்திடம் அவர் தெரிவிக்கவில்லை.
ஒரு வாரம் கழித்துத் தனது பணப்பற்று அட்டைக்குக் கட்டணம் செலுத்த முயன்றபோதுதான் தனது இரு வங்கிக் கணக்குகளிலும் பணம் இல்லை என்பதும் மோசடிக்காரர்கள் அதைத் திருடிவிட்டனர் என்பதும் திருவாட்டி லைக்குத் தெரியவந்தது.
இதுகுறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது.