தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய மோசடியில் $20,000க்குமேல் இழந்த மாது

2 mins read
2afeeadc-fb48-4150-b0c5-1b5b0bc00887
படம்: - தமிழ் முரசு

இணையத்தில் உணவு வாங்கிய திருவாட்டி லிம் (உண்மைப் பெயரல்ல) என்பவர், மோசடிக்காரர்கள் அவரது ஆண்ட்ராய்டு கைப்பேசியையும் வங்கி விவரங்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து $20,000க்கும் மேல் இழந்துவிட்டார்.

திருவாட்டி லிம், 54, கடன்பற்று அட்டை கணக்கிலும் இரண்டு டிபிஎஸ் சேமிப்புக் கணக்குகளிலும் சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட $20,500 இழந்தார்.

அவர் மூன்றாம் தரப்புச் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புக்குள் சென்ற பிறகு, மோசடிக்காரர்கள் அவரின் கடன் வரம்பை அதிகரித்து எல்லா பணத்தையும் வெளியேற்றினர்.

திருவாட்டி லிம், அவரது முதிய பெற்றோருக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை வாங்க, ஜூலை 26ஆம் தேதி ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் ‘ஹேல்தி போக்ஸ்’ என்ற நிறுவனத்துடன் தொடர்புகொண்டார்.

அந்த விளம்பரம் உள்ளூர் உணவு நிறுவனமான ‘கிரேன்’இடமிருந்து வந்ததுபோல் தெரிந்தது. அவர் ஏற்கெனவே அந்நிறுவனத்திடமிருந்து உணவு வாங்கியிருந்ததால், அவருக்குச் சந்தேகம் எழவில்லை.

திருவாட்டி லிம் ‘ஃபேஸ்புக் மேசெஞ்சர்’ மூலம் விளம்பரத்தை வெளியிட்டவருடன் தொடர்புகொண்டார். அதன் பிறகு அவர்களுக்கு இடையிலான உரையாடல் ‘வாட்ஸ்அப்’இல் தொடர்ந்தது.

அந்த நபர், தாம் ‘கிரேன்’ நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று உறுதிப்படுத்திய பிறகு திருவாட்டி லிம்மிடம் வாட்ஸ்அப் வழியாகச் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பை அனுப்பினார். அவர் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்தார்.

பின்னர் அதே நாள் மாலை 6 மணி அளவில் அவரது வங்கியில் இருந்த பணம் அனைத்தும் காணாமல்போயிருந்ததை அவர் உணர்ந்தார்.

திருவாட்டி லிம் இது குறித்து ஜூலை 26ஆம் தேதி காவல்துறையிடம் புகார் செய்தார்.

விசாரணை தொடர்வதாகக் காவல்துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

ஆண்ட்ராய்ட் பயனர்களே குறி

அண்மைய மாதங்களில் வங்கி சார்ந்த தீங்குநிரல் மோசடிகளால் ஆண்ட்ராய்ட் பயனர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றின்மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து அனுமதியின்றி பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. இம்மோசடிகளுக்கு பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இரையாகியுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆண்ட்ராய்ட் பயனர்களிடமிருந்து அத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்டதாக வந்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று காவல்துறை தெரிவித்தது. சில நிகழ்வுகளில் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்த பணம் முழுவதும் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

தங்களது இணைய வங்கிக் கணக்கு விவரங்கள், ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல் அல்லது சிங்பாஸ் என எதனையும் வெளிப்படுத்தாதபோதும் அவர்கள் மோசடிக்கு ஆளாகினர்.

கடந்த வாரம் தீங்குநிரல் சார்ந்த மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பத்துப் பேரைக் காவல்துறை கைது செய்தது. சென்ற ஜூன் மாதம் ஆண்ட்ராய்ட் பயனர்கள் இருவர் தங்களது மத்திய சேம நிதிக் கணக்கிலிருந்து 99,800 வெள்ளியை இழந்தனர்.

குறிப்புச் சொற்கள்