ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் காரின் முன்பகுதியில் தொற்றிக்கொண்டிருந்த சைக்கிளோட்டியுடன் கிட்டத்தட்ட 100 மீட்டர் தொலைவிற்கு காரைச் செலுத்திய ஓட்டுநரின் மேல்முறையீடு நிராகரிப்பட்டுள்ளது.
முன்னதாக இருவரும் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்பட்டது.
இவ்வழக்கில், தனியார் சமையற் கலைஞரும் பயிற்றுவிப்பாளருமான திருவாட்டி இலெய்ன் மிஷெல் ஆவ் எனும் 50 வயது மாதுக்கு ஓராண்டு காலம் வாகனம் ஓட்டத் தடையும் மூன்று நாள் தடுப்புக் காவலும் விதிக்கப்பட்டன.
2023ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் சைக்கிளோட்டியான நிக்கொலெட் டான் ஷி-யென் எனும் மாதின் பாதுகாப்புக்கு மிரட்டலாக நடந்துகொண்டதை ஆவ் ஒப்புக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை (மே 16) அவரது வழக்கறிஞர், தடுப்புக்காவலுடன் வாகனம் ஓட்டுவதற்கான தடையும் விதிக்கப்படத் தேவையில்லை என்று வாதிட்டார்.
சைக்கிளோட்டியின் மூர்க்கத்தனமாக நடத்தையால் திருவாட்டி ஆவ் அதிர்ச்சியுற்றிருந்ததாகவும் கூறினார். பதற்றத்தைத் தணிக்க அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை என்பதுடன் சைக்கிளோட்டி அதற்குள்ளாகவே காரின் முன்பகுதியில் அமர்ந்துகொண்டார் என்பதையும் வழக்கறிஞர் சுட்டினார்.
ஆனால் அவர் காவல்துறையினர் வரும்வரை காத்திருந்திருக்க வேண்டும் என்று கூறிய அரசாங்க வழக்கறிஞர், திருவாட்டி டானின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி காரின் வேகத்தை திருவாட்டி ஆவ் அதிகரித்ததைச் சுட்டினார்.
திருவாட்டி ஆவ்வின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிபதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கட்டிக்காக்கும் வகையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்தினார். முதலில் சைக்கிளோட்டி செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்ட அவர், நிலைமையை மோசமாக்கும் வகையில் திருவாட்டி ஆவ் காரைச் செலுத்தியதாகக் கூறினார்.

