காவல்துறை அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்தை வாட்ஸ்அப் படமாகப் பயன்படுத்தி ஏமாற்றிய மோசடிக்காரரிடம் சிக்கி, மாது ஒருவர் இரண்டே வாரங்களில் 1 மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழந்துள்ளார்.
அதன் தொடர்பில், பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சோ வியாழக்கிழமை (ஜூலை 23) ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
மக்கள் சந்திப்புக் கூட்டம் ஒன்றில், குடியிருப்பாளர் ஒருவர் தம்மை அணுகி, அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறியதாகத் திரு சாய் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம்முதல், வாட்ஸ்அப் வழியே தொடர்புகொண்டு காவல்துறை அதிகாரி போல நடித்த மோசடிக்காரருக்கு, அந்த மாது தினமும் வீட்டில் எடுத்த தன் சுயபடத்தை அனுப்பி வந்ததாகத் திரு சாய் கூறினார்.
அந்த மாதிற்கு எதிராகக் கைதாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அந்த மோசடிக்காரர் அவருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
தான் நடத்தும் நாடகம் உண்மைதான் என அந்த மாதை நம்பவைப்பதற்காக, மோசடிக்காரர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் படத்தை வாட்ஸ்அப் சுயவிவரப் படமாகப் பயன்படுத்தியிருந்தார்.
“ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரக் காலகட்டத்தில், அவரது கணக்கிலிருந்து 32 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன,” என்று கூறிய திரு சாய், பாதிக்கப்பட்ட மாது தனது நகை, இதர விலைமதிப்பற்ற பொருள்களையும் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, அவற்றை நேரில் சென்று மோசடிக்காரரிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
அந்த மோசடிக்காரர் கூறியவற்றை உறுதிப்படுத்த, திரு சாயும் அவரது குழுவினரும் அந்த மாதுடன் காவல் நிலையத்திற்குச் சென்றனர். அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை அந்த மாது உணர்ந்தார்.
“மோசடிகள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தயவுசெய்து ஒருவரையொருவர், குறிப்பாக, நமது மூத்தோரைக் கவனித்துக்கொள்ளுங்கள்,” என்று திரு சாய் கூறினார்.

